அவதூறு வழக்கு: கருணாநிதி கோர்ட்டில் ஆஜர்

karunaமுதல் அமைச்சர் ஜெயலலிதா 4 ஆண்டுகளில் சாதித்தது என்ன என்கிற தலைப்பில் ‘ஆனந்த விகடன்’ வாரப்பத்திரிகை கடந்த நவம்பர் மாதம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.இதனை முரசொலி நாளிதழில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்டுரையாக எழுதி இருந்தார். இதையடுத்து கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது முதல் – அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் ஜனவரி 18–ந்தேதி இருவரும் கோர்ட்டில் ஆஜராகி வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு முன்பு கருணாநிதி மீது பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட போதெல்லாம் வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஆனால் ஜெயலலிதா தொடர்ந்த இந்த அவதூறு வழக்கில் தடை உத்தரவு எதுவும் பெறப்போவதில்லை என்றும், விசாரணைக்காக நானே கோர்ட்டில் நேரில் ஆஜராவேன் என்றும் கருணாநிதி அறிவித்தார்.

இந்நிலையில் இன்று சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது.

காலை 10 மணி அளவில் கருணாநிதி கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக காரில் வந்தார். அவரது கார், எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் அருகில் உள்ள வாசல் வழியாக முதன்மை செசன்ஸ் கோர்ட்டை சென்றடைந்தது.

பின்னர் கீழ்தளத்தில் உள்ள சாய்வு பாதை வழியாக லிப்ட் இருக்கும் பகுதிக்கு சென்ற கருணாநிதி, அங்கிருந்து லிப்ட் மூலம் முதல் மாடியில் உள்ள முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கு சென்று நேரில் ஆஜரானார்.

உடனே அவதூறு வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையை மார்ச் 10–ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கருணாநிதி கோர்ட்டுக்கு வந்த போது அவருடன் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன், கனிமொழி எம்.பி., தயாநிதிமாறன் ஆகியோரும் வந்திருந்தினர்.

கருணாநிதி கோர்ட்டுக்கு வந்ததை தொடர்ந்து இன்று காலை முதலே ஐகோர்ட்டுக்கு தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். அவர்களில் வக்கீல்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தவிர யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தி.மு.க. மாவட்ட செயலாளர்களான முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம், சேகர்பாபு, சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன் ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

இவர்களில் மா.சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம் ஆகியோர் வக்கீல் உடை அணிந்திருந்தனர். ஐகோர்ட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படாத கட்சியினர், கருணாநிதி வரும் வழியில் தி.மு.க. கொடியை கையில் ஏந்திய படியே திரண்டு நின்றிருந்தனர்.

கருணாநிதியை பார்ப்பதற்காக சென்னை மட்டுமின்றி காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் இருந்தும் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டு வளாகத்துக்குள் சென்று விட்டால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விடும் என்று போலீசார் கருதினர்.

இதைத் தொடர்ந்து அவர்களை கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஐகோர்ட்டு நுழைவு வாயில்கள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply