தடை நீங்கியதால் அமெரிக்க-ஈரானிய கைதிகள் பரிமாற்றம்
அணு ஆயுதங்களை ரகசியமாக ஈரான் தயாரித்து வருவதாக கூறி அந்நாட்டுக்கு 1995-ல் அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் ஈரான் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பல்வேறு நாடுகளில் ஈரான் வைத்திருந்த சொத்துகளும் முடக்கப்பட்டன.இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் அமெரிக்கா-ஈரான் ஆகிய நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி அணுசக்தி பிரச்சினையில் சர்வதேச அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகளுக்கு கீழ்படிந்து செயல்பட ஈரான் ஒப்புக் கொண்டது. இதைத்தொடர்ந்து ஈரான் மீது விதித்து இருந்த அனைத்து பொருளாதார தடைகளையும் அமெரிக்கா நீக்கியது.
இந்த அறிவிப்பு வெளியான உடனடியே இரு நாடுகளும் தங்களது சிறைகளில் உள்ள கைதிகளை பரிமாறிக் கொண்டன.
ஈரான் சிறையில் இருந்த வாஷிங்டன் போஸ்ட் நிருபர் ஜேசன் ரெசயான்(வயது 39) மற்றும் 2 அமெரிக்கர்களை ஈரான் விடுவித்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் தலைநகர் டெஹ்ரானில் இருந்து ஜெர்மனிக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
இதேபோல், ஈரானுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடைகளை மீறி அந்நாட்டுக்கு உதவியதாக 7 ஈரானியர்களை அமெரிக்கா சிறைபிடித்து வைத்து இருந்தது. அவர்களை அமெரிக்கா விடுவித்தது.
இப்படி இரு தரப்பிலும் கைதிகளை பரிமாறிக் கொண்டது, பாராட்டுக்குரிய விஷயம் என்று ஈரானிய மற்றும் அமெரிக்க அமைப்புகள் தெரிவித்தன. இரு நாடுகளிடையேயும் உறவை பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வந்த அமெரிக்க, ஈரானிய கவுன்சில் கைதிகளை பரிமாற்றம் செய்தது, மிகப்பெரிய திருப்புமுனை என்று குறிப்பிட்டது.
ஈரான் சிறையில் 545 நாட்கள் வாடிய வாஷிங்டன் போஸ்ட் நிருபர் ஜேசன் ரெசயான் கூறும்போது, 48 மணி நேரத்துக்கு முன்பு வரை நரகத்தில் இருந்தேன். இப்போது நன்றாக இருக்கிறேன் என்றார்.
இதனிடையே கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையை ஈரான் தயாரிக்க உதவியதாக 11 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதில் அமீரகத்தை தளமாக கொண்ட மபுரூகா டிரேடிங், அதன் உரிமையாளர் ஹூசைன் போர்னாக்ஸ்பாண்ட் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அடங்குவர்.
இரு நாடுகளிலும் சொத்துகளை கொண்டுள்ள தேசிய ஈரானிய, அமெரிக்க கவுன்சில் இயக்குனர் ஜமால் அப்தி இதுபற்றி கூறும்போது, புதிதாக 11 நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாது. ஏனெனில் இவை சிறிய அளவிலான செயல்பாடுகளைத்தான் கொண்டவை’’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply