பாகிஸ்தான் பல்கலை.யில் தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல்: மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரம்
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் பக்துவானில் சார்சடா என்ற இடத்தில் அமைந்துள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 2014-ல் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவர்கள் உட்பட 140 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவர் தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றது.அதே பாணியில் தீவிரவாதிகள் தற்போது பச்சா கான் பல்கலைக்கழகத்தில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாகிஸ்தானின் ‘டான்’ செய்தி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், “பச்சா கான் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்து இரண்டுக்கும் மேற்பட்ட முறை பயங்கர குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடைபெற்று வருகிறது. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் டி.ஐ.ஜி. சையது வாசிர் தெரிவித்துள்ளார். 8-ல் இருந்து 10 தீவிரவாதிகள் வளாகத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
50 மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மாணவர்களில் 5 பேர் காயமடைந்திருந்தனர். அவர்கள் சார்சடா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகம் அருகே மீட்புப் பணியில் உதவி வரும் ஏதி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் இதுவரை 15 பேரது சடலங்களை மீட்டுள்ளதாக கூறுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தலைக்கு குறிவைத்த தீவிரவாதிகள்:
மீட்புக் குழுவில் இருந்த அதிகாரி ஒருவர் டான் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “தீவிரவாதிகள் மாணவர்கள் தலையை குறிவைத்தே சுட்டுள்ளனர்” என்றார்.
பச்சா கான் நினைவு தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. பல்கலைக்கழகத்தில் 3000 மாணவர்கள் உள்ளனர். இதுவரை 70 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply