ரிசாதுடன் இணைந்து வடக்கில் கூட்டமைப்பை கவிழ்க்க சதி – மஸ்தான் எம்.பி மறுப்பு
அமைச்சர் ரிஸாத்துடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை கவிழ்க்கப் போவதாக சமூக ஊடகங்களில் வெளி வரும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவலாக அமைச்சர் ரிஸாத்துடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டு தழிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களினுடைய ஆட்சியை கவிழ்க்கப் போவதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என்பதை ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த ஊடக மறுப்பறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
அன்மையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான செய்திகளை வெளியிடுவது ஊடக தர்மத்திற்கு எதிரானதுடன் அது என்னை நம்பி வாக்களித்த தமிழ் மக்களின் மனங்களை புன்படுத்துகின்ற செயலாகவும் அமைந்துள்ளது.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போது நான்கு இணைத்தலைவர்களில் வட மாகாண சபை முதலமைச்சர் C.V.விக்ணேஸ்வரன் அவர்களும், குழுக்களின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்களநாதனும் வருகை தராமையினால் ஏனைய இரு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான நானும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் அக்கூட்டத்தை தலைமை தாங்கி நடாத்தினோம்.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு முதலமைச்சர் சார்பாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா வருகை தந்திருந்தார்.
குறித்த கூட்டத்தின்போது நானும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் கூட்ட விடயமொன்றைக் குறித்து பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டியே மேற்படி செய்தி சமூக ஊடகங்களில் உலாவ விடப்பட்டுள்ளன.
நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களது அணிசார்ந்த பாராளுமன்ற உறுப்பினராவேன். எமது கட்சியின் தலமைப்பீடம் எடுக்கும் முடிவுகளுக்கு அமைவாகவே உள்ளுராட்சி தேர்தல்களின்போது எனது செயற்பாடுகள் அமையும். இதனை விடுத்து நான் ஓர் தனிக்கட்சியை நடாத்துவது போன்றும் விரும்பிய நேரத்தில் விரும்பிய திசையில் பயணிக்கலாம் என்று எண்ணுவதும் தவறான ஊகங்களே தவிர வேறு எதுவும் இல்லை.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆதாரமற்ற இச்செய்தியானது தமிழ் மக்களுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் நான் பேணி வரும் சுமூகமான உறவை துண்டிப்பதற்க்காகவே திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.
மேலும் எமது நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் உறவில் விரிசலை உண்டாக்கும் விதமாக செய்ற்படுபடுபவர்களுக்கும் என்னை மேற்கோள் காட்டி வெளியிடப்படும் ஆதாரமற்ற செய்திகளுக்கும் எதிராக இனி வரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இலங்கையில் குறிப்பாக வடக்கில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுடைய உறவில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் நான் அக்கரையுடன் செயற்படுகின்றேன்.
அதனால் எனக்கு யாரையும் கவிழ்க்க வேண்டியஅவசியம் இல்லை என்பதை தங்களது செய்தி நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறியத்தருவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply