புலிகள் ஊடுருவியுள்ள பாதுகாப்பு வலயம் முழுமையாக சுற்றிவளைப்பு:பிரிகேடியர் உதய நாணயக்கார

புலிகளின் சகல செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முடக்கியுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகள் ஊடுருவியிருக்கும் பாதுகாப்பு வலயத்தை அண்மித்துள்ள அதேசமயம், சகல முனைகளிலும் சுற்றிவளைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புலிகள் எந்த விதத்திலும் தப்பிச் செல்ல முடியாத வகையிலும், தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத விதத்திலும் கடற்பரப்பிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரத்ன தெரிவித்தார்.

கடற்படையினர் தமது முழுப் பலத்தையும் பயன்படுத்தி கடற்பரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் கடற்பரப்பிலும் புலிகள் தப்பிச் செல்ல முடியாத விதத்தில் நான்கு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஐ. சி. ஆர். சி. யின் ஒத்துழைப்புடன் இதுவரை புலிகளின் பிடியிலிருந்து பதினைந்து தடவைகள் சுமார் ஆறாயிரம் வரையிலான பொதுமக்களை கடற்படையினர் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் சகல செயற்பாடு களும் 21 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், தற்பொழுது புலிகளின்

பிடியிலிருந்து தப்பிவரும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பிரிகேடியர் உதய நாணக்கார மேலும் தகவல் தருகையில்,

புலிகளின் பிடியிலிருந்து இதுவரை 59,441 பொது மக்கள் தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் செய்து கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தப்பிவரும் பொது மக்களின் வருகையை தடுக்கும் வகையில் புலிகள் பல்வேறு வழிவகைகளை பயன்படுத்துகின்றனர். பல சந்தர்ப்பங்களில் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை நடத்திய போதிலும் தப்பி வரும் பொதுமக்களின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எஞ்சியுள்ள பொது மக்களையும் எவ்வாறாவது பாதுகாப்பான முறையில் மீட்டெடுக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது. படையினரின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள் தமது சகல வளங்களையும், பலத்தையும் நாளுக்குநாள் முழுமையாக இழந்து வருகின்றனர். புலிகள் சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருப்பதுடன் பொது மக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் ஊடுருவியுள்ளனர். பாதுகாப்பு வலயத்திலிருந்து படையினரை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்ற போதிலும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு படையினர் பதில்தாக்குதல்களை நடத்துவதை தவிர்த்துள்ளனர் என்றார்.

புதுமாத்தளன் வடபகுதியில் நிலைகொண்டுள்ள கிராமத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர், பிரசன்ன டி சில்வா தலைமையிலான படையிலும், இரணைப்பாலைக்கு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினரும், புதுக்குடியிருப்புக்கு கிழக்கே நிலைக் கொண்டுள்ள இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையிலான படையினரும் தமது நிலைகளை நாளுக்குநாள் விஸ்தரித்துவருவதுடன் புலிகளின் மண் கரண்களையும் கைப்பற்றிவருகின்றனர்.

மூன்று படைப்பிரிவுகளுக்கும் உதவியாக கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான இராணுவத்தின் எட்டாவது விசேட படைப்பிரிவும் களமுனையில் ஈடுப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் தினங்களில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் படையினர் நம்புவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply