இழுவைப் படகுகளினால் தொடர்ந்து பாதிப்படையும் தலைமன்னார் மீனவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்தியாவுக்கு மிகவும் அருகில் உள்ள கிராமம் தலைமன்னார் மேற்கு ஆகும். இங்கு 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இது மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பழைமை வாய்ந்த கிராமங்களில் ஒன்றாகும். இங்குவாழும் குடும்பங்கள் அனைத்தும் மீன்பிடித் தொழிலை ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றனர்.
குறிப்பாக இராமர் அனையின் முதலாவது திட்டு இந்தக் கிராமத்திலிருந்தே ஆரம்பமாகின்து.
இந்த கிராம மக்கள் கடந்த பல வருடங்களாக இந்திய இழுவைப்படகுகளால் பல பாதிப்புக்களுக்கு உள்ளாகி வந்த நிலையில், தற்போது இலங்கை அரசாங்கத்தினால் பாக்கு நீரிணையின் இலங்கைக்குச் சொந்தமான கடல் வளங்களைப் பாதுகாக்கும் செயற்பாடு துரிதமாக நடை முறைப்படுத்தியதால் இந்திய இழுவைப்படகுகளின் வருகை குறைந்து காணப்பட்டமையால் மிகுந்த நிம்மதியுடன் தமது தொழிலை செய்து வந்தனர்.
ஆனால் அந்த நிம்மதி நிலைக்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை (28/01/2016) அன்று பேசாலை மீன் பிடிசங்கத்திற்குச் சொந்தமான 25 இழுவைப்படகுகள் இராமர் அணையின் முதலாவது திட்டுக்கு அருகாமையில் இறால் பிடிப்பதற்காக தமது இழுவைப்படகுகளை பயன் படுத்தியமையினால் அந்தப் பகுதியில் தமது நண்டுவலைகளை பாய்ச்சி இருந்தவர்கள் தமது நண்டு வலைகளைப் பிடிக்கச் சென்ற பொழுது மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
அங்கு சில வலைகள் காணாமல் போயும் சிலவலைகள் அறுந்த நிலையிலும் காணப்பட்டது.
இதில் பல வலைகள் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களினுடையதாகும். இந்த 25 இழுவைப்படகுகளும் இவ்வலைகளில் கொடிகள் கடலுக்கு மேலே தெரிந்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் தடை செய்யப்பட்ட இழுவைப்படகுகளில் தமது தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமையினால் பல பொருளாதார இழப்புக்கள் மீனவர்களுக்குஏற்பட்டது.
இவர்கள் மீண்டும் சனிக்கிழமை (30/01/2016) அன்று தமது நண்டு வலைகளைப் பிடிக்கச் சென்ற போது அங்கு பலருடைய வலைகள் காணாமல் போனமையை பார்க்கக் கூடியதாக இருந்தது.
கடலில் பல பகுதிகளில் வலைகளைத் தேடியும் அவை கிடைக்கவில்லை. இதனால் மீனவர்கள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தனர்.
இந்த விடயம் தொடர்பாக இழுவைப்படகு தொழிலாளர்களிடம் நியாயம் கேட்ட பொழுது அவர்கள் பொருத்தமான பதிலையும் வழங்கவில்லை. ஆத்திரமுற்ற மீனவர்கள் தமது ஆலயத்தில் ஒன்று கூடி இந்தப் பிரச்சனையினை சட்ட நடவடிக்கையாக்க வேண்டும் எனக் கூறி பல தீர்மானங்களை அங்கு நிறைவேற்றினர்.
பின்னர் நேற்று அனைவரும் ஒன்று திரண்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தமது முறைப்பாட்டினை மீனவர் சங்கத் தலைவர் மூலம் முன்வைத்தனர்.
அத்துடன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட இழுவைப்படகு உரிமையாளர்களின் படகு இலக்கங்களும் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ளது.
சில தகாதவார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட படகு உரிமையாளர்களின் இலக்கங்களும் பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு நாள் இழுவைப்படகின் அட்டகாசத்தின் மூலம் கிட்டத்தட்ட 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் சேதமடைந்துள்ளது.
இதனை பொலிஸ் அதிகாரி வழக்குப் பதிவு செய்வதற்கான முதல் ஆவணமாகப் பெற்றுக் கொண்டனர். அத்தோடு கடந்த இரண்டு தினங்களாக ஊர் மறியல் போடப்பட்டு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லாமல் இந்தப் பிரச்சனைக்கு நியாயம் கேட்க தம்மைத் தயார்ப்படுத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்ட மீனவர் சமாசத்திடம் தமது பிரச்சனை தொடர்பாக நியாயம் கேட்பதற்கான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தேசிய மீன் பிடித்துறை அமைச்சரைச் சந்தித்து தமது பிரச்சனை தொடர்பாக விபரிப்பதற்கான ஆயத்தங்களும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக இந்தப் பிரச்சனையில் நஸ்ர ஈட்டைப் பெற்றுக் கொள்வதை விட இனி மேல் இழுவைப்படகுகள் எமது கடற்பரப்பில் தொழில் செய்வதை முற்றாக தடை செய்ய வேண்டும் என்பதே எமது மக்களின் கோரிக்கையாகும்.
குறிப்பாக இலங்கை அரசாங்கத்தினால் இந்தத் தொழில் தடை செய்யப்பட்ட தொழில் என வர்த்தமானி அறிவித்தல்(கெசட்) செய்யப்பட்டும் தொடர்ந்தும் இந்தத் தொழிலை நடைபெற்றுக் கொண்டு இருப்பதினால் மாவட்ட மீன்பிடிச்சங்கத்தின் உயர் அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்? இவர்கள் ஏன் தேசிய அரசாங்கத்தின் கொள்கையினை நடை முறைப்படுத்த தம்மைத் தயார் படுத்தாமல் இருக்கின்றார்கள்? என்கின்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுகின்றது.
எப்பொழுது இந்த இழுவைப் படகுகளின் பிரச்சினைகள் நீங்கி மீண்டும் எமது தொழில் நடவடிக்கையினைச் சுதந்திரமாக நடை முறைப்படுத்த எப்பொழுது காலம் கனியும் என தலைமன்னார் மேற்குமக்கள் காத்து இருக்கின்றனர். என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply