வெல்லும் வரை ஈ.பி.ஆர்.எல்.எப் வென்ற பின் தமிழரசுக் கட்சி .ஓரம் கட்டப்படும் ஈ.பி.ஆர்.எல்.எப்?

sureshதமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களினதும் அவரது கட்சியினதும் பங்களிப்பை யாரும் உதாசீனம் செய்து விட முடியாது.திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் தன்னை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவராக வெளிப்படுத்தியதையும் விட தன்னை கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராகவே வெளிப்படுத்தி வந்துள்ளதையே நாம் கண்டிருக்கிறோம். அந்த அளவிற்கு கூட்டமைப்பின் மீதும் அதன் தமிழ்த் தேசிய செயற்பாடுகளின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் ஈடுபாட்டையும் கொண்டவராகவே காணப்பட்டார்.

2009 இற்கு பின்னரான கூட்டமைப்பின், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தவறான போக்குகளை தொடர்சியாக விமர்சித்ததன் விளைவு அவரும் அவரது கட்சியும் படிப்படியாக ஓரம் கட்டப்பட்டு கடந்த பாராளுமன்ற தேர்தலோடு அது உச்ச கட்டத்திற்கு சென்று அவரது பாராளுமன்ற ஆசனம் தட்டி பறிக்கப்பட வழிவகை செய்தது.

மிக அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யயப்பட்ட சிவமோகன் என்பவரை தமிழரசுக் கட்சி அங்கத்துவம் கொடுத்து தனது கட்சியில் சேர்த்துக்கொண்டதன் மூலம் மீண்டும் ஒருமுறை அதன் ஓரங்கட்டல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவமோகன் தமிழரசுக் கட்சியில் அங்கத்துவம் பெற முன்னர் இடம்பெற்ற சில நிகழ்வுகளை குறித்துக் கொண்டு சில வருடங்கள் பின்னோக்கிச் செல்வது சற்று பொருத்தமானதாக இருக்கும் என நம்புகின்றேன்.

1 சிவமோகன் அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் மீது தான் கொண்ட விசுவாசத்தை நிரூபிக்கும் முகமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்துகளுக்கு தனது கண்டனத்தை தெரிவித்து சுமந்திரனை காரசாரமாக விமர்சித்திருந்தார்.

2 பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான முதல் வாகெடுப்பில் தனது எதிர்ப்பை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் இணைந்து தெரிவித்ததுடன் அது தொடர்பான அறிக்கையிலும் கையெழுதிட்டிருந்தார்.

3 வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பிற்கு முன்னர் கொழும்பில் வைத்து திரு சம்பந்தன் திரு சுமந்திரன் ஆகியோருடன் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டார். இப்பேச்சு வார்த்தையை அடுத்து மாட்ட இணைத்தலைவர் பதவிக்கான கடிதம் இவர் கைகளை வந்தடைந்தது.

4 இக்கடிதம் கிடைத்த சந்தோஷத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் உடனும் அதன் தலைமையுடனும் சகல தொடர்புகளையும் தவிர்த்துக் கொண்டார் அல்லது அல்லது துண்டித்துக் கொண்டார்.

5 வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு எதிரான தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றி திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து தமிழரசுக் கட்சிக்கும் அரசிற்கும் தனது கன்னி விசுவாசத்தை காண்பித்தார்.

மேற் குறிப்பிட்ட தொடர்ச்சியான சம்பவங்களை நோக்கும் போது தமிழரசுக் கட்சி எவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை பலவீனப் படுத்த தனது முயற்சிகளை மேற்கொள்கின்றது என்பதனை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். கூட்டமைப்பு என்ற தத்துவத்திற்கு கட்டுப்பட்டு தமிழரசுக் கட்சி சின்னதில் ஈ.பி.ஆர்.எல்.எப் தேர்தலில் போட்டியிட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை பலவீனப்படுத்துவதற்கு பணத்தையும் பதவிகளையும் தாராளமாக பாவிக்கின்றது தமிழரசுக் கட்சி.

வடக்கு மாகாண சபை தேர்தல் நிதிக்காக கனடா வந்த சுமந்திரனிடம் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கு வழங்கப்பட்ட ஆசனப் பங்கீடு அதிகம் என குறைபட்ட போது “வெல்லும் வரை தான் அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் வென்ற பின்னர் அவர்கள் தமிழரசுக் கட்சியினர்” என குறிப்பிட்டதுடன் அது தமிழரசுக் கட்சி ஏற்கனவே திட்டமிட்டு விரித்திருந்த வலையில் போய் விழுந்த திரு ஐங்கரநேசனின் கட்சி தாவலுடன் உறுதி செய்யப்பட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனந்தி சசிதரன் அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசன ஒதுக்கீட்டில் தன்னை நிறுத்த சுரேஷ் பிரேமச்சந்திரனை அணுகிய போது குறுக்கிட்ட மாவை சேனாதிராஜா, அனந்தி அவர்கள் தமிழரசுக் கட்சி உறுப்புனர் என்றும், ஈ.பி.ஆர்.எல்.எப் அவரை தனது கட்சியில் நிறுத்த முடியாது என சட்டம் தெரியாமல் சட்டம் பேசிய மாவை, இன்று எந்த வெட்கமும் இன்றி அன்று எதை செய்ய கூடாது என்றாரோ இன்று அதையே சிவமோகனை அழைத்து செய்திருக்கிறார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பில் அதிக வாக்குகளை பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப் துரைரெட்டனம் அவர்களை எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் இருத்துவதை தவிர்த்தது அவரை விட குறைந்த வாக்குகள் பெற்ற தமிழரசுக் கட்சிகாரர் ஒருவரை எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்தியதுடன் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் மாகாண அமைச்சுகளைப் பங்கீடு செய்யும் சந்தர்ப்பத்தில் மீண்டும் துரைரெட்னம் ஒதுக்கப்பட்டு குறைந்த வாக்குகள் பெற்ற தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களுக்கு அச்சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது.

இறுதியாக நடந்த தேர்தலில் பாராளுமன்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றுக்கு மேலாக கிடைகுமானால் மாற்றுக் கட்சிகளில் ஒன்றிற்கு ஒரு ஆசனம் வழங்கப்படும் என உறுதியளித்த தமிழரசுக் கட்சியினர், இரண்டு ஆசனங்கள் கிடைத்தும் அதில் ஒன்றை திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு கொடுக்கும் படி பலரும் வற்புறுத்தியும் தேர்தலில் நின்று தோற்றவர்களுக்கு இல்லை என கூறி பல போக்குகள் காட்டி இறுதியில் தமிழரசுக் கட்சியியில் நின்று தோற்றுப் போன இருவருக்கு அந்த ஆசனங்கள் வழங்கப்பட்டது.

ஒரு கூட்டு அமைப்பில் ஒரு கட்சியின் தவறான பக்கங்களை இன்னொரு கட்சி மக்கள் நலனில் இருந்து சுட்டி காட்டிய ஒரே நோக்கத்திற்காக அக்கட்சியையும் அக்கட்சியின் தலைமையையும் குறித்த கட்சியால் ஓரம் கட்டப்படுமானால் மற்றைய கட்சி தொடர்ந்து அந்த கூட்டு அமைப்பில் அங்கத்துவம் பெறுவதில் எந்த வித அர்த்தமும் இருப்பதாக தோன்றவில்லை.

எனவே திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் அவரது கட்சியும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய கட்சியை அல்லது புதிய கூட்டணியை ஸ்தாபித்து தமிழர் அரசியலை முன்னெடுப்பது காலம் அவர்களுக்கு பணித்த கட்டளை என்பதே எனது கணிப்பாக்கும்.

 

நன்றி – Brin Nath,

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply