உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருகிறது: சிரியாவில் அமைதி ஏற்பட உலக நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி

suryae938-47d5-99cd-8c936d065861_S_secvpfஉள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதி நிலவ நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் 17 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியா அரசு அதிகாரிகள் இடையே நேரடியாக அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

அமெரிக்க, ரஷியா, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பலமிக்க 17 நாடுகள் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல்ரீதியான தீர்வை முன்னெடுத்து செல்ல வசதியாக  சிரியா ராணுவம் மற்றும் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தனிநபர் போராளி குழுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ஹெஜ்புல்லா இயக்கப் போராளிகள் மற்றும் ரஷியா ஆதரவுப் படைகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒருவாரத்துக்குள் வெள்ளை கொடி ஏந்தி போரை கைவிட வேண்டும். இருதரப்பினரும் தங்கள்வசம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இந்த முடிவுக்கு மேற்கண்ட 17 நாடுகளும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், தடைபட்டுள்ள மனிதநேய நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் மிக அவசரமாக தேவைப்படும் இடங்களிலும், போராளிகளால் கைப்பற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் இன்றுமுதல் நிவாரண உதவிகளை அனுப்பும் பணிகள் தொடங்கவுள்ளன.

 

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, ‘இந்த சமாதான ஒப்பந்தத்தை சிரியா முழுவதிலும் உள்ள (ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற அல்-நுஸ்ரா தீவிரவாதிகள் தவிர) அனைத்து போராளிகள் குழுக்களும் மதித்து நடக்க வேண்டும். தங்களுக்குள் இருக்கும் குரோதங்களையும், பகைமையையும் மறந்தும், கைவிட்டும் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள அவர்கள் முன்வர வேண்டும்.

 

சிரியாவில் நீண்டகால, நம்பிக்கைக்குரிய, நிரந்தர அமைதி ஏற்படுத்துவதற்கான புதிய திட்டத்தை அமெரிக்கா மற்றும் ரஷியாவை சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறும் ஐ.நா.சபை தலைமையிலான செயல்திட்டக்குழுவினர் ஒன்றிணைந்து வகுத்து அளிப்பார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply