அரசாங்கத்தின் பங்காளிகளாகவிருக்கவே விரும்புகிறோம்: ஐரோப்பிய ஆணைக்குழு
மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களின் மனிதாபிமான உதவிகளைப் பூர்த்திசெய்யவே மனிதநேய உதவி அமைப்புக்கள் விரும்புகின்றனவே தவிர, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட அவை விரும்பவில்லையென ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமை அமைப்புக்களும், உதவி அமைப்புக்களும் விடுதலைப் புலிகளுக்கு உதவவும், மோதல்களை அதிகரிக்கச் செய்வதற்குமே முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதநேய உதவித் திணைக்களத்தின் தலைவர் கென்ற்கின்ஸ்சி, “நாம் இலங்கை அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கவே விரும்புகின்றோம். எதிரிகளாகவல்ல” எனக் கூறியுள்ளார்.
“மனிதநேய விவகாரங்களில் அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்களைப் பூர்த்திசெய்ய உதவுவதே எமது பாத்திரம்” என்றார் அவர்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்களால் இடம்பெயர்ந்து நாளாந்தம் 1000 பேர் முகாம்களில் அனுமதிக்கப்படுவதாக வவுனியாவிலுள்ள முகாம்களுக்கு விஜயம் செய்திருந்த கென்ற்கின்ஸ்சி கூறினார்.
இடம்பெயர்ந்து முகாம்களிலிருக்கும் மக்களை அரசாங்கம் சரியான முறையில் கவனித்துக்கொண்டாலும், பெரும் எண்ணிக்கையானவர்கள் முகாம்களில் இருப்பதால் சுகாதாரப் பிரச்சினைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சுற்றிவர முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு முகாம்களிலுள்ள மக்களைவிட அதிகமான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடையில் ஈடுபட்டிருப்பதையே முகாம்களில் காணப்பகூடியதாகவுள்ளது என அவர் கூறினார். “அங்கு பெருமளவான இராணுவத்தினர் உள்ளதுடன், பொதுமக்கள் முகாம்களுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு நடமாடும் சுதந்திரம் இல்லை” என்றார் அவர்.
பொதுமக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், விடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து இந்த வருடம் 53,000 மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்திருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply