மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் நிறைவு: கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்
மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ பயணத்தின் மூலம் 234 தொகுதிகளையும் நேற்று நிறைவு செய்தார். இதையடுத்து தி.மு.க.தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார். பயணத்தின் மூலம், தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 120 கிலோ மீட்டர் அவர் சுற்றி வந்துள்ளார். தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் தொடங்கினார்.
பயணத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள அடிப்படை தேவைகள், பிரச்சினைகளை மக்களை நேரடியாக சந்தித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
கடந்த நவம்பர் 6-ந்தேதி வரை 3 கட்டங்களாக தமிழக முழுவதும் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு ‘நமக்கு நாமே’ பயணம் மேற்கொண்டு 212 தொகுதிகளை முடித்தார்.
4-வது கட்டமாக சென்னை மற்றும் சுற்றி உள்ள 22 தொகுதிகளில் நமக்கு நாமே பயணத்தை மேற்கொள்ள மு.க. ஸ்டாலின் திட்டமிட்டிருந்தபோது, சென்னை நகரை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை கடந்த ஜனவரி 6-ந்தேதி, சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். பின்னர் 120 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு சென்னை மற்றும் சுற்றி உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு சென்றார்.
அரங்குகள் மூலம் 300 கூட்டங்களை நடத்தி பலதரப்புப்பட்ட மக்கள், தொழிலாளிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில், 4 லட்சத்து 5 ஆயிரம் மனுக்களை பொதுமக்களிடம் பெற்றார்.
கடைசித்தொகுதியாக சென்னை தியாகராயநகர் தொகுதியில் ‘நமக்கு நாமே’ பயணத்தின் மூலம் நேற்று வியாபாரிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடினார்.
தியாகராயநகர் தொகுதியோடு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும், ‘நமக்கு நாமே’ பயணத்தை மு.க.ஸ்டாலின் நேற்று நிறைவு செய்தார். இதையடுத்து மு.க.ஸ்டாலின், தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து ஆசிப்பெற்றார்.
மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அண்ணாநகர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- 234 தொகுதிகளிலும் அடித்தட்டு மக்களை சந்தித்து உள்ளீர்கள். மக்களின் அடிப்படை தேவை என்னவென்று கருதுகிறீர்கள்?
பதில்:- மக்களை பொறுத்தவரையில் அடிப்படை தேவையாக தமிழகத்தில் உடனடியாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதாக இருக்கிறது.
வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டுள்ளது.
கேள்வி:- மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று கூறுகிறீர்கள். எந்த வகையில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பதை விளக்குங்கள்?
பதில்:- வருவாயை பெருக்க மாற்று திட்டங்கள் வைத்திருக்கிறோம். அதை தற்போது தெரிவிக்க முடியாது. கருணாநிதி சொல்வதை தான் செய்வார். செய்வதை தான் சொல்வார். எனவே தி.மு.க.ஆட்சியில் கருணாநிதி போடும் முதல் கையெழுத்தே மதுவிலக்கு கையெழுத்து தான். நிச்சயம் நடக்கும். எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply