சட்டசபை இடைநீக்க உத்தரவில் இருந்து மீண்டு வந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கருணாநிதி வாழ்த்து

karunaதி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கேள்வி:- உச்சநீதி மன்றம் 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் “சஸ்பெண்டு” உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறதே?

பதில்:- தமிழகத்திலே உள்ள ஜனநாயக ஆர்வலர்கள் அனைவருக்கும் உவப்பினை அளித்திடும் தீர்ப்பு இது. எத்தனையோ வழக்குகளில் இந்த அரசுக்கு எதிராக நீதிமன்றங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாகவும் மேலாகவும் தமிழகச் சட்டப்பேரவையின் தீர்மானத்தை ரத்து செய்து அமைந்திருக்கும் இந்தத் தீர்ப்பு, மக்களாட்சி மாண்புகளை முற்றிலுமாகப் புறக்கணித்து நடைபெறும் பேரவைக்கு நல்ல படிப்பினை என்பதுதான் எனது கருத்தாகும்.

 

“சஸ்பெண்டு” உத்தரவால் பாதிக்கப்பட்டு, தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆறு தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

கேள்வி:-தமிழகத்திற்கு வருகை தந்த இந்தியத்தலைமைத் தேர்தல் ஆணையர், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியிருக்கிறாரே?

 

பதில்:-தமிழகச்சட்டப்பேரவை பொதுத்தேர்தல் குறித்து, இந்தியத்தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் சென்னையில் 11௨௨016 அன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று, வரவேற்கத்தக்க பல முடிவுகள் அதிலே எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற எந்த மாநிலப் பொதுத் தேர்தல்களிலும் இல்லாத அளவுக்கு, இந்தத் தேர்தலில் சுமார் 50 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதை ஆதாரப்பூர்வமாக தி.மு.க.வும், தமிழகத்திலே உள்ள மற்ற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எடுத்து விளக்கியதை ஏற்றுக்கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர், போலி வாக்காளர்களைக் கண்டுபிடிக்க வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வீடு, வீடாக வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணி நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

 

மேலும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்துப் பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்றும், கடந்த தேர்தலைப் போல, 144 தடை உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக ஆன்லைனில் வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 20 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் கூறியிருப்பதும் பாராட்டத்தக்க அம்சங்களாகும்.

 

கேள்வி:-ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென்ற விருப்பத்துடன் பணியில் சேர்ந்து சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி மாண்டு போன லான்ஸ் நாயக், ஹனுமந்தப்பா பற்றி?

 

பதில்:-மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உரிய செய்தி அது. நாட்டின் பாதுகாப்புக்காக பணியில் சேர்ந்து இளம் வயதிலேயே அகால மரணம் அடைந்து விட்ட அத்தனை வீரர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், அவர்களுடைய குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

கேள்வி:-விசைத்தறி நெசவாளர்கள் 16 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து கொண்டிருக்கிறார்களே?

 

பதில்:-அ.தி. மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரில், இவர்களும் முக்கியமானதொரு பிரிவினர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி நெசவாளர்கள் கடந்த 16 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அதன் காரணமாக 2 லட்சம் தொழிலாளர் கள் வருவாய் இழந்து வாழ்வாதாரத்தை பறி கொடுத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்து 14-ந் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்க முன் வந்தால் போராட்டத்தைத் திரும்பப் பெறுவோம் என்றும், இல்லாவிட்டால் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் விசைத்தறியாளர்கள் கூறியுள்ளார்கள். இந்தத் துறைக்கு என்று இந்த ஆட்சியில் அமைச்சர் ஒருவர் இருந்தால், அவர் இதிலே இனிமேலாவது தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும்.

 

கேள்வி:-கேரள சட்டசபையில் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த உம்மன்சாண்டி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்:-தமிழக ஆட்சியினர் இதற்கு தக்க பதிலை, 16-ந் தேதி தமிழக அரசின் சார்பில் வெளியிடவிருக்கும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

 

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply