புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது

sangariபாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றுதல் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக யாழ். கச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, தமது கட்சியின் சார்பாக ஆலோசனைகள் அடங்கிய மஹஜர் நேரடியான விளக்கங்களுடன் கையளிக்கப்பட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசியலமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தால் போதுமென தமது கட்சி கருதுவதாகவும், நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமாயின் அதற்கு தமது ஆதரவை வழங்குவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பரவலாக்கல் தொடர்பில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் தீர்வு காணமுடியும் என யோசனை முன்வைத்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, சமஷ்டி முறைமை மற்றும் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியுள்ளது.

இதேவேளை, ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும், அரசியலமைப்பு மாற்றப்படுவது மிகவும் மோசமான விடயமாகும் எனவும், உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு எப்போதுமே மாற்றப்படாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லையென்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு எண்ணத்தைக் கைவிட்டு, தற்போதுள்ள அரசியலமைப்பில் பொருத்தமான திருத்தங்களைக் கொண்டுவந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் நன்மை கருதி தமிழ் மக்கள் முரண்படுவதைக் கைவிட்டு, அனைவரும் ஒற்றுமையாக இந்திய முறையிலான அரசியலமைப்பை ஏற்று தென்னாபிரிக்க உரிமைகள் சட்டத்தை உள்வாங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயலவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் அறிக்கையில் மேலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் நிர்ணய சபை, தமிழர் விடுதலைக் கூட்டணி, புதிய அரசியலமைப்பு

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply