தேசிய அரசால் மட்டுமே தேசிய பிரச்சினையை தீர்க்க முடியும்

ranilதேசிய அரசாங்கத்தினால் மட்டுமே நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்றும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு நாட்டைக் கட்டியெழுப்பப் போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் இதனைக் குறிப்பிட்ட பிரதமர், தேசிய அரசாங்கம் இல்லாவிட்டால் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க பலமில்லாமல் போய்விடும் என்றும் கிடைத்துள்ள இறுதி வாய்ப்பை பயன்படுத்துவது முக்கியமென்றும் தெரிவித்தார். வாத விவாதங்கள், அரசியல் கயிறிழுப்புகள் மக்களுக்கு வெறுத்துப் போய்விட்டது. மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே காலத்தின் தேவையாகும் என குறிப்பிட்ட பிரதமர் ஐ.தே.க. வா – ஸ்ரீல.சு.கட்சியா என பார்க்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாக வேண்டும். பிரச்சினையற்ற நாட்டை உருவாக்கியுள்ளோம் என்ற பெருமைக்குரியவர்களாக நாம் திகழ வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

 

ஐக்கிய தேசிய கட்சியின் தென் மாகாண பிரதிநிதிகளுக்கான சந்திப்பு நேற்று மாத்தறை ‘சணச’ சண்டபத்தில் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது. அமைச்சர்கள் சஜித் பிரேமதாச, வஜிர அபேவர்தன,

 

சாகல ரத்நாயக்க உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

 

தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. 11 வருடங்களுக்குப் பின் நாம் அரச அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு புதிய பயணம் ஒன்றை ஆரம்பிக்க முடிந்துள்ளது.

 

1973 ல் ஜே.ஆர். ஜெயவர்தன கட்சித் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்று 1977ல் ஜனாதிபதியாகி நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பினார். அதனையடுத்து அவருக்குப் பின்னர் இக்கட்சியை எதிர்காலத்தில் வழிநடத்த 2ம் மூன்றாம் அணி தலைவர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். அவர் தூர தரிசனத்துடன் அதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டார். அவருக்குப் பின் ஆர். பிரேமதாச, காமினி திசாநாயக்க, அத்துலத் முதலி போன்றோரை உருவாக்கினார். முச்சக்கர வண்டி போல் அவர்கள் செயற்பட்டனர். என்னை ‘ஸ்பெயார்’ டயர் போல வைத்திருந்தார். பின்னர் முச்சக்கர வண்டியில் இரு பக்க சில்லுகளும் வெவ்வேறாகப் பிரிந்தன. அத்தோடு பிரேமதாசவின் டயரிலும் காற்றுப் போய்விட்டது. பின்னர் நான் செயற்பட்டேன் இது கூட ‘கிண்ணஸ்’ சாதனைதான்.

 

தற்போது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு நான் பிரதமராகவும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் புதிய யுகமொன்றை உருவாக்கியுள்ளோம். மிகவும் கஷ்டமான இக்கால கட்டத்தில் கட்சியைப் பிளவுபடுத்தால் பாதுகாக்க எம் அனைவருக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

 

நாம் தேசிய அரசாங்கம் அமைத்து முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்தியுள்ளோம். இதுதான் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சிறந்த சந்தர்ப்பம். தேசிய அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் ஐந்து வருடங்களில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு நாட்டை முன்னேற்றுவோம் என உறுதியாகக் கூறமுடியும்.

 

நான் பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் நாம் நாட்டுக்காக மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டை முன்னேற்றுவோம்.

 

இப்போது மக்கள் கட்சியைப் பார்ப்பதில்லை. புதிய மாற்றங்களையே எதிர்பார்க்கின்றனர். அரசியல் கயிறிழுத்தலை மக்கள் விரும்பவில்லை. மக்கள் பெரும் எதிர்பார்ப்புகள் தேசிய அரசாங்கத்தை பார்க்கின்றனர். மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே எமது பொறுப்பாகும்.

 

பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி மக்களின் வருமானத்தை அதிகரித்தல், கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், கல்வித் துறையை மேம்படுத்தல், ஜனநாயகத்தை பலப்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டல் போன்றவையே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

 

வாத விவாதங்கள் மக்களுக்கு இப்போது வெறுத்துப் போய்விட்டது. அரசியல் விளையாட்டுக்கள் இனி வேண்டாம் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு, இளைஞர்கள் தமது எதிர்காலம் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு நாம் முன்னேற வேண்டியுள்ளது.

 

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளும் ஒன்றிணைந்த அரசாங்கம் ஒரே கொள்கையின் கீழ் செயற்படுகின்றது. எதிர்க் கட்சிகளும் எம்மோடு இணைந்து செயற்படுகின்றன. இதற்கிணங்க நாட்டுக்காக நாம் முன்னெடுக்க வேண்டியதை மேற்கொண்டு மீண்டும் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது பொறுப்பாகும். பின்புலத்தைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

 

இதை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமா என சிந்திக்கத் தேவையுமில்லை. அப்படி பார்த்துக் கொண்டிருந்தால் இந்த நாடு முன்னேற்றமடையப் போவதில்லை.

 

இது எமக்குக் கிடைத்துள்ள இறுதி வாய்ப்பு, எமது எதிர்கால சந்ததிக்காக நாம் செயற்பட வேண்டியுள்ளது. சிலர் என்னிடம் Òதேசிய அரசாங்கம் அவசியமா? என கேள்வி எழுப்புகின்றனர். தேசிய அரசாங்கம் இல்லாவிட்டால் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கும் பலம் இல்லாது போய்விடும் என்பதே எனது பதில்.

 

நாம் நாட்டுக்காக ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவது உறுதி. ஐ.தே.க. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்து செயற்படுவது தொடர்பில் கட்சியினர் வித்தியாசமாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டின் முன்னேற்றமே எமது நோக்கம். அதை நாம் நிறைவேற்ற வேண்டும்.

 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து அரசாங்கம் என்ற பெருமை கூறும் யுகத்தை ஏற்படுத்துவோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply