பருவநிலை மாற்றம் பிரச்சினைக்கு தீர்வுகாண பாடுபடுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

modiபருவநிலை மாற்றம், எரிசக்தி பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாடுபடுமாறு மாணவர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு உள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

பட்டம் பெறுவதுடன் மாணவர்களின் படிப்பு முடிந்து விடுவது இல்லை. ஆர்வத்துடன் புதிது புதிதாக கற்றுக்கொண்டு மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலகம் வெப்பமாகி வருவது உலக நாடுகளுக்கு மிகுந்த கவலை அளிக்கும் பிரச்சினையாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் உலகில் நிலவும் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை மிகப்பெரும் சவாலாக எடுத்துக்கொண்டு வெப்பநிலையை குறைப்பதற்காக வழிவகைகளை மாணவர்கள் ஆராய வேண்டும். வெப்பநிலையை சிறிதளவு குறைத்தால்கூட அது இந்த மனிதகுலத்துக்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.

மேலும் எரிசக்தி பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கண்டுபிடிப்பதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பது கரும்பு விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாக இருக்கும். சூரியஒளியின் மூலம் மின்சாரத்தை உருவாக்குவதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் புற்றுநோயை விட அபாயகரமான நோய்களின் பாதிப்பு உள்ளது. அத்தகைய நோய்களை தீர்ப்பதற்கான மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் ஒருவருடன் ஒருவர் கலந்து ஆலோசிப்பது முக்கியமானதாகும். பரஸ்பர ஆலோசனைகள் அறிவை மேம்படுத்த உதவும்.

புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் உலக நாடுகளுக்கு நாம் வழிகாட்ட முடியும். மாணவர்களின் ஆராய்ச்சி முனைவர் பட்டத்தை மட்டும் இலக்காக கொண்டு அமையாமல், புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கவேண்டும்.

இங்கு படித்து பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்கள் டாக்டர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

துறவி ரவிதாசின் 639-வது பிறந்த நாளை யொட்டி வாரணாசியில் சீர் கோவர்த்தன்பூர் என்ற இடத்தில் உள்ள அவரது கோவிலுக்கு பிரதமர் மோடி சென்று வழிபட்டார். அங்கு அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதமருடன் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தாவர்சந்த் கெலாட், ராஜாங்க மந்திரி விஜய் சாம்ப்லா ஆகியோரும் சென்று இருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply