முடிந்தால் புதிய கட்சியொன்றை மஹிந்த ஆரம்பித்துக் காட்டட்டும் :நளின் பண்டார
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடியுமானால் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துக் காட்டட்டும். வயிற்றிலுள்ள குழந்தை வெளிச்சத்தை காணாது என்பது போலவே மஹிந்தவின் புதிய கட்சி மந்திரம் அமைந்துள்ளது. எனினும், அடுத்த தேர்தலில் அன்னம் சின்னத்தில் அல்ல. அதற்கு மாறாக யானையின் வாலில் கோட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிப்பெறும் என்று அக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
புதிய கட்சி என்ற பீதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஏற்படுத்தி ஊழல் மோசடிக்காரர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு ஜனாதிபதி அஞ்சமாட்டார். மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த வேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்துவதில் சில குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர். எனினும் சுதந்திரக் கட்சியின் பிளவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மீதே குற்றம் சுமத்தப்படுகின்றது. எக்காரணம் கொண்டும் பிளவுப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் எம்மிடம் இல்லை. ஆனால் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாத தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில உள்ளிட்டோரே கட்சியை பிளவுப்படுத்துவதில் முனைப்புடன் உள்ளனர்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக எச்சரிக்கை விடுத்த வண்ணமுள்ளார். எதிர்வரும் 29 ஆம் திகதி கட்சி காரியாலயமொன்றும் திறக்கப்படவுள்ளது. இருந்தபோதிலும் மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஆரம்பிக்க மாட்டார். வயிற்றிலுள்ள குழந்தை வெளிச்சத்தை காணாது என்பது போலவே மஹிந்தவின் புதிய கட்சி மந்திரமாகும்.
எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தல் பிற்போடப்படுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் மீதான அச்சமே காரணம் என்று கூறுகின்றனர். அது முற்றிலும் தவறாகும். புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் களமிறங்கியுள்ளது. இதன்படி புதிய தேர்தல் முறைமையின் கீழேயே அடுத்த தேர்தல் நடத்தப்படவுள்ளது. தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கும் மஹிந்தவின் மீதான அச்சத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
இந்நிலையில் புதிய கட்சியை ஆரம்பிப்போம் என்று சூளுரைத்து கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ முடியுமாயின் தனிக் கட்சியொன்றை ஆரம்பித்து காட்டவேண்டும். அதன்பின்பு தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும்.
எவ்வாறாயினும் தற்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. கிராம மட்டத்தில் எமது கட்சியின் பலம் ஒங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த தேர்தலில் அன்னம் சின்னத்தில் அல்ல. அதற்கு மாறாக யானை வாலில் கோட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிப்பெறும்.
இதேவேளை புதிய கட்சி என்ற பீதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஏற்படுத்தி ஊழல் மோசடிக்காரர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply