25 ஆண்டுக்கு பின் பரோலில் வெளியே வந்த நளினி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பரோலில் வெளியே வந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி. இவரது தந்தை சங்கர நாராயணன். ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவர், நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று (23-ம் தேதி) மாலை உடல் நலக்குறைவு காரணமாக 91 வயதான சங்கர நாராயணன் காலமானார். அவரின் உடல், சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, இன்று (24-ம் தேதி) அடக்கம் செய்யப்பட உள்ளது.
தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவதற்காக, தன்னை பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நளினி சிறைத்துறையிடம் மனு அளித்தார். இதையடுத்து, இன்று காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 12 மணி நேரம் நளினிக்கு பரோல் வழங்கியுள்ளது சிறைத்துறை.
இதை தொடர்ந்து இன்று காலை, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரத்னவேல் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பவானிமேரி சப்–இன்ஸ்பெக்டர் லதா மற்றும் துப்பாக்கி ஏந்திய 7 போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கோட்டூர்புரத்திற்கு நளினியை அழைத்து சென்றனர். தந்தை சங்கர நாராயணன் இறுதிச் சடங்கு முடிந்ததும், இரவு வேலூர் சிறைக்கு புறப்பட்டு செல்வார்.
இதற்கு முன் பலமுறை பரோலுக்கு நளினி விண்ணபித்தும் பரோல் வழங்கப்படவில்லை. தற்போது, நளினி முதல் முறையாக பரோலில் வெளியே வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply