விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கும் உயர்ந்த பொறுப்பினை நிறைவேற்றுவேன்

maithri57விவசாய சமூகத்தினருக்கு உரமானியத்தினை வழங்கும் உயர்ந்த பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு தனிப்பட்ட ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேனென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இன்று (28) நண்பகல் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் விவசாய சங்கங்களுக்கும் தொடர்புபட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தாம் நெல் விதைகளை கொள்வனவு செய்யும்போதும் உரமானியங்களை பெற்றுக்கொள்ளும்போதும் முகம்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அத்தோடு இதுதொடர்பான உத்தேச பிரேரணைகள் மற்றும் யோசனைகளையும் இச்சந்தர்ப்பத்தில் முன்வைத்தனர்.

இவ்வாறான பிரச்சனைகள் எழும்போது அவற்றுக்கான தீர்வுகளை கண்டறிவதற்கு அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தினை ஜனாதிபதி இதன்போது போது சுட்டிக்காட்டினார்.

மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்கும் பொறுப்பிலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் விலகிச்செல்லாமல் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நெல் விதைகளை கொள்வனவு செய்யும்போதும் உரமானியங்களை பெற்றுக்கொள்ளும் போதும் விவசாய சமூகத்தினர் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காக விசேட கூட்டமொன்று வரும் நாட்களில் இடம்பெறும் என்றும் இந்த கூட்டத்தின்போது விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் முன்வைத்த பிரேரணைகள் மற்றும் யோசனைகள் தொடர்பாக அக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் பி.ஹரிசன், வடமத்திய மாகாணத்தின் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, விவசாய அமைச்சின் செயலாளர், தேசிய உரமானிய செயலகத்தின் பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply