உப்பூர் கிராமத்தில் 12,778 கோடி செலவில் நிலக்கரியில் இயங்கும் அனல்மின் நிலையம்: ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த தொழிற் வளர்ச்சிக்காகவும் தொலை நோக்கு 2023 செயல்படுத்திட முக்கிய காரணியாக விளங்கும் மின்சாரத்தின் தேவை தமிழ்நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்வதை கருத்தில் கொண்டும், தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிட வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், மின் உற்பத்தியை பெருக்குதல், மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மின் தொடரமைப்புகளை நிறுவுதல், மின் அனுப்புகை மற்றும் மின் பகிர்மானத்தை விரிவாக்குதல் போன்ற பணிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 995.16 ஏக்கர் நிலப்பரப்பில் 12,778 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள நிலக்கரியில் இயங்கும் 2×800 மெகாவாட் மிக உய்ய உப்பூர் அனல் மின் திட்டத்திற்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
உப்பூர் அனல்மின் திட்டமானது செப்டம்பர் 2019–ல் நிறைவு பெற்று, நாளொன்றுக்கு 38.4 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 12,000 மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கிடைக்கும்.2×800 மெகாவாட் உப்பூர் மிக உய்ய அனல் மின் திட்டத்திற்கான கொதிகலன், சுழலி, மின்னாக்கி தொகுப்பு மற்றும் அதனைச் சார்ந்த பொதுவியல் பணிகளுடன், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளான வடிவமைத்தல், உற்பத்தி, விநியோகம், நிறுவுதல், தேர்வாய்வுக்குப்பின் செயல்படவைத்தல் ஆகிய பணிகளுக்கு 5,580 கோடி ரூபாய்க்கான ஒப்பந்த ஆணையினை பாரத மிகுமின் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அதுல்சோப்திடம் முதல்– அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.மேலும், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, சென்னை வியாசர்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் குன்னப்பட்டு கிராமம், ஒமேகா தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் 230/110 கி.வோ. துணை மின் நிலையங்கள்; திருவள்ளூர் மாவட்டம் அலமாதி, மதுரை மாவட்டம் நாட்டார்மங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் பாக்குடி, வேலூர் மாவட்டம் புன்னை, கடலூர் மாவட்டம் அடரி ஆகிய இடங்களில் 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்; திருப்பூர் மாவட்டம் தேவனூர்புதூர், ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் ஆகிய இடங்களில் 110/22 கி.வோ துணை மின் நிலையங்கள்.திருவண்ணாமலை மாவட்டம் அத்திமூர் மற்றும் மாம்பட்டு ஆகிய இடங்களில் 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள் என மொத்தம் 424 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 13 துணை மின்நிலையங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.இதில் அமைச்சர் திரு. நத்தம் விசுவநாதன், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலாளர், எரிசக்தித் துறை பழனியப்பன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்சாய் குமார், பாரத மிகுமின் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.கே. ஹெடா மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply