150 தொகுதிகளில் தி.மு.க. போட்டி: தே.மு.தி.க. – காங். 84 தொகுதிகள் – கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்
தமிழக சட்டசபை தேர்தலில் பல முனைப் போட்டி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., மக்கள் நலக் கூட்டணி ஆகியவை பலப்பரீட்சைக்கு தயாராகி விட்டன. தே.மு.தி.க., பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் எந்த கூட்டணியில் சேரும் என்பது இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தே.மு.தி.க. இதுவரை யாரிடமும் பிடிகொடுக்காமல் உள்ளது. என்றாலும் தே.மு.தி.க. தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
‘கிங்’ ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட விஜயகாந்த் தனது கட்சி மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளின் வற்புறுத்தல் காரணமாக இந்த தேர்தலிலும் ‘‘கிங்–மேக்கர்’’ ஆக மாற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வேறு வழி இல்லாமல் தி.மு.க. கூட்டணிக்கு அவர் வந்து சேர்ந்து விடுவார் என்று கூறப்படுகிறது.
தி.மு.க.வுடன் சேர தயாராகி விட்ட விஜயகாந்த் தே.மு.தி.க.வுக்கு அதிகபட்ச பலன்களைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாகவும் தீவிரமாகவும் உள்ளார். சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தி.மு.க. தரப்பில் இருந்து பேச வந்த தொழில் அதிபரிடம் விஜயகாந்த் 4 முக்கிய நிபந்தனைகளை விதித்தார்.
1. துணை முதல்–அமைச்சர் பதவி, 2. அமைச்சரவையில் 10 மந்திரி பதவி, 3. 78 எம்.எல்.ஏ. சீட் (234ல் மூன்றில் ஒரு பங்கு), 4. உள்ளாட்சித் தேர்தலின் போது 3 மேயர் பதவி ஆகியவையே விஜயகாந்த் விதித்த நிபந்தனைகளாகும். தி.மு.க. தரப்பில் இந்த 4 நிபந்தனைகளும் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து தே.மு.தி.க. பிரதிநிதிகளிடம் தி.மு.க. சார்பில் மேலும் சிலர் சென்று பேச்சு நடத்தினார்கள். தே.மு.தி.க. கேட்கும் துணை முதல்வர் மற்றும் 10 மந்திரி பதவி போன்ற கோரிக்கைகள் சாத்தியமில்லாதது என்று விஜயகாந்திடம் விளக்கமாக எடுத்து கூறினார்கள். இதனால் துணை முதல்வர் நிபந்தனையை விஜயகாந்த் கைவிட்டார்.
ஆனால் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று தொடர்ந்து கூறியபடி இருந்தார். இந்த நிலையில் தே.மு.தி.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் தி.மு.க. அதிரடியாக சேர்த்தது. அதன் பிறகே தே.மு.தி.க.வின் நிலையில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கியது.
ஆட்சியில் பங்கு என்ற நிபந்தனையையும் நாளடைவில் கைவிட்ட விஜயகாந்த் தி.மு.க.விடம் 90 எம்.எல்.ஏ. சீட் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 50–50 இடங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இந்த கோரிக்கைகளையும் தி.மு.க. மூத்த தலைவர்கள் ஏற்கவில்லை.
திராவிட கட்சிகளில் முதன்மையான கட்சியாகத் திகழும் தி.மு.க.வின் பலம் மற்றும் இமேஜ் குறையும் வகையில் தொகுதி பங்கீடு செய்யக் கூடாது என்பதில் தி.மு.க. மூத்த தலைவர்கள் உறுதியாக உள்ளனர். 2006 மற்றும் 2011–ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை விட்டு கொடுத்ததால் தி.மு.க. பலத்த இழப்பை சந்தித்ததை சுட்டிக் காட்டும் தி.மு.க. மூத்த தலைவர்கள் அதே தவறை இந்த தடவையும் செய்து விடக்கூடாது என் பதில் மிகவும் உஷாராகவும் கவனமாகவும் உள்ளனர்.
2006–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 129 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட தி.மு.க. 105 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தது. அந்த தேர்தலில் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற தி.மு.க. ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில் கூட்டணி கட்சிகள் தயவில்தான் ஆட்சியில் தொடர முடிந்தது.
அதுபோல் 2011–ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. 119 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. 115 இடங்களை அதாவது பாதிக்கு பாதி இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தது. அந்த தேர்தலில் தி.மு.க. 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மொத்த தொகுதிகளில் பாதி தொகுதிகளில் போட்டியிட்டதால் தி.மு.க. பலவீனமாகி விட்டது போன்ற தோற்றம் உருவானது. அந்த தோற்றத்தை உடைத்தால்தான் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.
அது மட்டுமின்றி ஆட்சி அமைக்க எந்த கட்சியிடமும் கெஞ்சும் நிலையில் தி.மு.க. இருக்கக் கூடாது என்பதிலும் தி.மு.க. மூத்த தலைவர்கள் இந்த தடவை தெளிவான மனநிலையில் உள்ளனர். எனவே தனித்து ஆட்சிக்கு அமைக்கும் வகையில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது.
தி.மு.க. தரப்பில் இந்த தடவை குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 150 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் தனித்து ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் நம்பரான 117 இடங்களைப் பெற முடியும் என்று தி.மு.க.வினர் இலக்கு வைத்துள்ளனர்.
150 தொகுதிகள் போக மீதமுள்ள 84 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க தி.மு.க. தீர்மானித்துள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும்பட்சத்தில் இந்த 84 தொகுதிகளை தே.மு.தி.க.வும், காங்கிரசும் சுமூகமாக பேசி பிரித்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. விட்டுக் கொடுக்கும் 84 இடங்களில் 50 இடங்களை தே.மு.தி.க.வும் 34 இடங்களை காங்கிரசும் பகிர்ந்து கொள்ளலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் இந்த முடிவு தே.மு.தி.க.வினரிடம் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
90 தொகுதிகள் வேண்டும் என்று முதலில் கேட்ட தே.மு.தி.க.வினர், தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் காரணமாக கொஞ்சம், கொஞ்சமாக இறங்கி வந்தனர். 80, 70 இடங்கள் என்று பேரம் நீடித்தது.
‘‘தி.மு.க. 130 இடங்களை எடுத்துக் கொண்டு எங்களுக்கு 70 தொகுதிகளை விட்டுத் தர வேண்டும்’’ என்று தே.மு.தி.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் 150 தொகுதிகளில் போட்டியிட்டே தீர வேண்டும் என்பதில் தி.மு.க. பிடிவாதமாக நின்று விட்டது. இதன் காரணமாக தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி பேச்சு வார்த்தையில் கடந்த சில வாரங்களாக முட்டுக்கட்டை நீடித்தது.
இந்த நிலையில்தான் விஜயகாந்த்தை மனதை மாற்றும் முயற்சிகளில் பா.ஜ.க. தலைவர்கள் ஈடுபட்டனர். இதை அறிந்து உஷாரான காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதற்காக தங்கள் தொகுதி ஒதுக்கீட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும் தியாகத்துக்கு முன் வந்ததாக கூறப்படுகிறது.
4 தொகுதிகளை விட்டுத் தருவதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் தே.மு.தி.க. 54 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று விஜயகாந்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே பெற்ற தே.மு. தி.க.வுக்கு இந்த தடவை கூடுதலாக சுமார் 10 இடங்கள் வரை கிடைப்பதால் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து விடலாம் என்று விஜயகாந்திடம் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். என்றாலும் விஜயகாந்த் 54 தொகுதியை ஏற்க விருப்பம் இல்லாமல் உள்ளார்.
தி.மு.க.விடம் அதிக தொகுதிகள் பெற்று விட வேண்டும் என்பதே விஜயகாந்தின் லட்சியமாக உள்ளது. இதனால் தி.மு.க. – தே.மு.தி.க. பேச்சுவார்த்தை எந்த ஒரு முடிவுக்கும் வராமல் இழுபறி தொடர்ந்து நீடிக்கிறது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டால் தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply