14 அரசியல் கைதிகளினதும் உடல்நிலை கவலைக்கிடம்! அரசு தரப்போ பராமுகம்
மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது என்று அவர்களின் உறவுகள் தெரிவித்தனர். நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி குறித்த கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளபோதிலும் இது தொடர்பில் அரசு தரப்பு பராமுகமாகவே இருக்கின்றமை தமக்கு கடும் வேதனையைத் தருகின்றது என்றும் அவர்கள் கண்ணீருடன் கூறினர். மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா.நீதிநாதன், க.வேதநாயகம், ந.தர்மராஜா, சு.ஞானசீலன், தயாபரன், தி.மனோகரன், யோசப் செபஸ்தியான், சுப்பிரமணியன் கபிலன், இராசதுரை திருவருள் மற்றும் இரவீந்திரன் மதனி ஆகிய 14 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 23ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இன்று 12ஆவது நாளாகவும் இவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது. இந்நிலையில், 14 பேரினதும் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது என்று சிறைச்சாலை அதிகாரிகளும், உண்ணாவிரதக் கைதிகளின் உறவுகளும் தெரிவித்தனர். தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வொன்று கிட்டாத வரையில் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர் என்று சிறைச்சாலை அதிகாரிகளும், உண்ணாவிரதக் கைதிகளின் உறவினர்களும் மேலும் கூறினர்.
அவர்களில் பலர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் அவர்கள் தொடர்ந்து சிகிச்சைபெறுவதை மறுத்துவிட்டு மீண்டும் சிறைக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அரசியல்வாதிகளால் கூறப்படுவது ஊடகங்களில் செய்தியாக வருகின்றபோதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை என்று உண்ணாவிரதக் கைதிகளின் உறவுகள் கவலையுடன் கூறினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தரப்பினர் இது தொடர்பில் பராமுகமாகவே இருக்கின்றமை தமக்கு கடும் வேதனையைத் தருகின்றது என்றும், இனியாவது தாமதிக்காது அரசு தரப்பு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உண்ணாவிரதக் கைதிகளின் உறவுகள் கண்ணீருடன் கூறினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply