கூட்டணி உறுதி: கருணாநிதியை விஜயகாந்த் 11-ந்தேதி சந்திக்க திட்டம்?
தமிழக சட்டசபைக்கு 15-வது முறையாக மே மாதம் 16-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. டெல்லியில் இருந்து வந்த முன்னாள் மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டு, கூட்டணியை உறுதி செய்து சென்றார். இந்த நிலையில், வலுவான கூட்டணியாக தேர்தலை சந்திக்க நினைத்த தி.மு.க., மேற்கொண்டும் சில கட்சிகளை கூட்டணிக்கு இழுக்க முயற்சி மேற்கொண்டு வந்தது. வாக்கு வங்கியில் 3-வது இடத்தில் உள்ள தே.மு.தி.க.வை இழுக்கத்தான் தி.மு.க.-பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவியது.
பா.ஜ.க. தரப்பில், அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் 2 முறை சென்னை வந்து விஜயகாந்தை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். மற்றொரு புறம் தி.மு.க.வும் தங்கள் கூட்டணியில் சேர தே.மு.தி.க.வுக்கு தூதுவிட்டது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷை சந்தித்து முதற்கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்தார். அதில் முன்னேற்றம் ஏற்படவே, அடுத்து பிரேமலதாவுடன் (விஜயகாந்தின் மனைவி) பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, கூட்டணிக்கு வர பல நிபந்தனைகளை பிரேமலதா விதித்ததாக தெரிகிறது.
ஒரு சில நிபந்தனைகளை தவிர, எல்லா நிபந்தனைகளையும் தி.மு.க. தரப்பு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து, தி.மு.க. கூட்டணிக்கு வர தே.மு.தி.க. தரப்பில் இருந்து பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது. தி.மு.க.-தே.மு.தி.க. இடையேயான கூட்டணி உடன்பாடு நேற்று முன்தினம் உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நேற்று பேட்டியளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, ‘‘பழம் கனிந்து கொண்டிருக்கிறது. பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை. கூட்டணி முடிவாவதில் இழுபறி எதுவும் கிடையாது. அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை’’ என்று கூறினார்.
கருணாநிதி அளித்த பதிலை வைத்து பார்க்கும்போது, தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியாகிக் கொண்டிருப்பதைத்தான், அவ்வாறு இலைமறை காயாக தெரிவித்திருக்கிறார்.
எனவே, தி.மு.க. உடனான கூட்டணியை உறுதி செய்வதற்காக, 11-ந்தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பார் என தெரிகிறது. அன்றைய தினம் தி.மு.க. – தே.மு.தி.க. இடையேயான கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி உடன்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தி.மு.க. தரப்பில் கூறப்பட்டதாவது:-
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு சங்க தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் 25 சதவீதம் இடம் வழங்கப்படுகிறது. ராஜ்யசபாவில் ஒரு இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் பங்கு என்ற கோரிக்கையையும் தே.மு.தி.க. வைத்துள்ளது. ஆனால், இதுவரை அதுகுறித்து மட்டும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply