நாட்டின் வளர்ச்சிக்காக முக்கிய மசோதாக்கள் நிறைவேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து டெல்லி மேல்-சபையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தன்னுடைய உரையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் சுமுகமாக நடைபெற வேண்டும் என்று தெரிவித்தார். இரு அவைகளும் எப்படி நடக்க வேண்டும் என்று அவருடைய ஆலோசனையை ஏற்று உறுப்பினர்கள் பின்பற்றுங்கள். ஜனாதிபதி உரையில் கிட்டத்தட்ட 300 திருத்தங்களை உறுப்பினர்கள் கோரியுள்ளனர். பல மசோதாக்கள் நிலுவையில் உள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் இவ்வளவு திருத்தங்களை மேற்கொள்வது என்பது சாத்தியம் அல்ல.
இந்த அவையில் ஜனாதிபதி உரையை திருத்தங்கள் எதுவும் இன்றி நிறைவேற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும். எனவே உறுப்பினர்கள் தங்கள் திருத்தங்களை திரும்பபெற வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேல்-சபை அறிஞர்கள் நிறைந்த அவை. இந்த அவை நாட்டுக்கும், மக்களுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். பாராளுமன்றத்தில் இரு அவைகளும் ஒருமித்த கருத்துடன் செயல்படுவது இந்திய ஜனநாயகம் ஆரோக்கியமாக செயல்பட வழிவகுக்கும்.
இந்த நாடு பல முக்கிய மசோதாக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது. மசோதாக்கள் தாமதமாவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எனவே நாட்டின் வளர்ச்சிக்காக சரக்கு மற்றும் சேவை வரி உள்பட நிலுவையில் உள்ள பல மசோதாக்களை நிறைவேற்ற அனைவரும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
காங்கிரஸ் தன்னுடைய ஆட்சியின் போது திட்டங்களை தொலைநோக்கி மூலம் பார்த்தது. ஆனால் தற்போதைய அரசை நுண்ணோக்கி மூலம் பார்க்கிறது. அவர்கள் இந்த ஆட்சி மீது தொடர்ந்து குறை கண்டுபிடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதுவும் நாட்டுக்கு நல்லது தான்.
தற்போதைய ஆட்சியில் நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், எப்.எம். ரேடியோ போன்றவற்றில் வெளிப்படையான ஏல நடைமுறையே உள்ளது. சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் இந்தியாவில் சுரங்க ஏலம் வெளிப்படையாக நடந்துள்ளதை பாராட்டி இருக்கிறது.
இந்த அரசில் யாரும் தன்னிச்சையாக செயல்படுவதில்லை. அதிகார பரவலாக்கம் என்பது தான் இந்த அரசின் கொள்கை. அதிகாரம் ஒருவரிடமே குவிந்து இருந்தால் இந்தியா போன்ற பெரிய நாடு சிறப்பாக இயங்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி 65 நிமிடம் பேசினார். அப்போது எதிர்கால திட்டங்களையும், முன்னுரிமை திட்டங்களையும் குறிப்பிட்டார். பிரதமர் பேசிய போது இடையே எதிர்க்கட்சிகள் பலமுறை குறுக்கீடு செய்தனர். எனினும் அவர் தன்னுடைய உரையின் போது காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அவ்வப்போது சாடியதுடன், நகைச்சுவையாகவும் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply