அமெரிக்காவில் மனைவி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் கேய் வெஸ்புரூக் (வயது 58). இவரது மனைவி குளோரியா. இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மனைவியுடன் சமரசம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம் என்ற எண்ணத்தில், வெஸ்புரூக் சம்பவத்தன்று ஹூஸ்டன் நகரில் உள்ள மனைவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு வேறு சில நபர்கள் இருப்பதை அவர் கண்டார். அவர்களுடன் அவர் மது அருந்தினார்.
அதைத் தொடர்ந்து மனைவியின் படுக்கை அறைக்கு சென்றார். அங்கு அவரது மனைவி வேறு ஒரு ஆணுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தார்.
வெளியே வேகமாக வந்த அவர், தனது வாகனத்தில் வைத்திருந்த வேட்டைத் துப்பாக்கியை எடுத்துச்சென்று, மனைவியின் வீட்டில் கண்ணில் பட்டவரையெல்லாம் சுட்டுத்தள்ளினார்.
இந்த கொடூர சம்பவத்தில் அவரது மனைவி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் வெஸ்புரூக் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து ஹண்ட்ஸ்வில்லேயில் உள்ள சிறையில் அவருக்கு விஷ ஊசி போட்டு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8.04 மணிக்கு அவரது தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் 1976-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்ட பின்னர் வெஸ்புரூக் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 535-வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply