தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 2590 விபத்துகள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டது முதல் இன்றுவரை 2590 விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதுடன் 20 பேர் உயிரிழந்திருப்பதாக நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷக்மன் கிரியல்ல தெரிவித்தார். குறிப்பிட்ட சில இடங்களில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவது அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், விபத்துக்களினால் நெடுஞ்சாலைக்கு ஏற்படும் சேதத்துக்கான நஷ்டத்தை காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
வாய்மூல விடைக்காக புத்திக்க பத்திரண எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இத்தகவல்களைத் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற 56 விபத்துக்களில் 14 பேர் காயமடைந்துள்ளனர். 2012ஆம் ஆண்டு 496 விபத்துக்கள் இடம்பெற்றதில் 4 பேர் உயிரிழந்தும், 59 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
2013ஆம் ஆண்டு 471 விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதுடன், இவற்றில் 9 பேர் உயிரிழந்தும் 46 காயமடைந்தும் உள்ளனர். 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற 632 விபத்துக்களின் காரணமாக 4 பேர் உயிரிழந்திருப்பதோடு 159 பேர் காயமடைந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு 935 விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்திருப்பதுடன் 124 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஐந்து வருட காலத்தில் இடம்பெற்ற விபத்துக்களினால் 2332 சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் கூடுதலான விபத்துக்கள் இடம்பெறுவது அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், 2 கிலோ மீற்றர் பிரதேசத்தில் 30, 40 விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எக்காரணத்தினால் இந்த விபத்துக்கள் சம்பவிக்கின்றன என்பது புலனாகவில்லை என்றார்.
2015ஆம் ஆண்டு 72 விபத்துக்கள் தவிர ஏனைய விபத்துக்களுக்கான நஷ்ட ஈடுகள் அறவிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply