இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

jeyaமுதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–தமிழக மீனவர்களை மீண்டும் இலங்கை படையினர் பிடித்து சென்றுள்ள சம்பவத்தை உங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருகிறேன். கடந்த 9–ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்களை 10–ந் தேதி அதிகாலை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று உள்ளனர்.பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியில் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து உள்ளனர்.

வரலாற்று காலத்தில் இருந்தே தமிழ்நாடு மீனவர்கள் பாக் ஜலசந்தியில் மீன் பிடித்து வருகிறார்கள். ஆனால், அங்கு மீன் பிடிப்பவர்களை திரும்ப திரும்ப இலங்கை கடற்படை கைது செய்வது வழக்கமாக உள்ளது. அந்த பகுதியை சர்வதேச கடல் எல்லையாக கருத கூடாது என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு வற்புறுத்தி வருகிறது. 1974 மற்றும் 1976–ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் சரியானது அல்ல என்று தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதை மீண்டும் பெற வேண்டும். பாரம்பரிய இடத்தில் தொடர்ந்து மீன் பிடிக்க உரிமை வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறோம்.

இலங்கை அரசு ஏற்கனவே மீனவர்களை பிடித்து சென்ற போது கைப்பற்றிய படகுகளை விடுவிக்கவில்லை. நீண்ட காலமாக அந்த படகுகள் அங்கேயே இருப்பதால் அவை மோசமாக சேதம் ஆகி உள்ளன. மேலும் அதிகமாக பெய்த பருவ மழையால் இன்னும் அதிகமாக சேதம் அடைந்து உள்ளது. ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் சொத்தாக இருந்த படகுகள் சேதம் அடைந்திருப்பது அவர்களுடைய வாழ்க்கையை நாசமாக்கி இருக்கிறது. அந்த படகுகள் முற்றிலும் நாசம் அடைவதற்குள் அவற்றை மீட்டு தர வேண்டும்.

தாங்கள் வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பித்து தூதரக ரீதியாக நடவடிக்கை எடுத்து இப்போது கைதான 4 மீனவர்களையும் சேர்த்து அங்கு சிறையில் உள்ள 68 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். அங்குள்ள 78 படகுகளையும் மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply