ஜனநாயகத்தை முழுமையாக கடைபிடிக்கும் மாநிலமாக தமிழகத்தை பா.ம.க. மாற்றும்: ராமதாஸ் பேட்டி
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேலூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– உலக அளவில் பழைமை வாதம், பொதுவுடைமை, சமூக ஜனநாயக கொள்கை உள்பட 4 விதமான அரசியல் கோட்பாடுகள் பிரித்து வைக்கப்பட்டு உள்ளது. இதில் சமூக ஜனநாயக கொள்கையை பா.ம.க. பின்பற்றுகிறது. உலகில் 55 நாடுகள் இந்த கொள்கையை பின்பற்றுகிறது. சமுதாயத்தில் ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரமான, நீதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இந்த கொள்கையின் அடிப்படை ஆகும்.
இந்த கொள்கையின்படி இனம், மொழி, மதம், ஜாதி, பாலினம் ஆகிய பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். இதன் மூலம் சுயமரியாதை வாழ்க்கை அனைவருக்கும் சாத்தியமாகிறது.
நாங்கள் விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிட இருக்கிறோம். அதில் ஆட்சி நடத்தும் அரசாங்கத்துக்கும் ஆளப்படும் மக்களுக்கும் இடையே ஒரு புதிய சமூக ஒப்பந்தம் ஏற்படுத்துவோம்.
அரசாங்கத்தை நடத்துபவர் மகாராஜா, மகாராணி, மக்கள் மன்னரின் பிரஜைகள் என்பது போன்ற மாயையை அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஏற்படுத்தி வைத்துள்ளன. இந்த மன்னர் ஆட்சி மனோ பாவத்துக்கு உடனே முடிவு கட்ட வேண்டும்.
அரசின் சேவைகளை தர்ம காரியங்களாக கருதும் அணுகுமுறை தமிழக ஆட்சியாளர்களின் பண்பாக இருந்து வருகிறது. இதற்கு மாறாக அரசின் பணிகளை மக்களின் உரிமைகளாக பார்க்க வேண்டும்.
50 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வரும் ஜனநாயக விரோத போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் ஜனநாயக உரிமையை ரூ. 1000, ரூ. 500–க்கு வாங்கும், விற்கும் நிலை உள்ளது.
திருமங்கலம், ஆர்.கே.நகர், ஸ்ரீரங்கம் என பல பார்முலாக்கள் உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஜனநாயகம் குறித்த பரந்த அளவிலான புரிதல் இல்லை. இந்த ஜனநாயக பணிகளை முழுமையாக கடைபிடிக்கும் மாநிலமாக தமிழகத்தை மாற்ற பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் ஓரு மெகாவாட் மின் உற்பத்திகூட செய்ய வில்லை. தி.மு.க. அதை விட மோசம். தமிழக முதல்– அமைச்சரை யாரும் பார்க்க முடியாது.
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் நீதிபதி ஒருவர் பேசும்போது நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது என்று கூறி இருக்கிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பேட்டியின்போது பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய மந்திரிகள் வேலு, என்.டி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் உள்பட பா.ம.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply