கெளவுரவ கொலைகளுக்கு பின்னால் உள்ள அரசியல் கட்சிகளை தண்டிக்க வேண்டும்: விஜயகாந்த்
கெளவுரவ கொலைகளுக்கு பின்புலமாக உள்ள சில அரசியல் கட்சிகளை தமிழக அரசு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதியார் பாடினாலும், சாதிகளை ஒழித்திட தந்தை பெரியார் போராடினாலும், தமிழகத்தில் சாதிக்காக சண்டையிடும் காலம் போய், கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை தமிழகத்தில் தற்போது நிலவிவருகிறது.
தருமபுரி இளவரசன், சேலம் கோகுல்ராஜ் ஆகியோரின் கொலையை தொடர்ந்து உடுமலை சங்கர் தற்போது கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறையினர் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாவண்ணம் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தமிழக மக்கள் சாதி, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் சகோதரர்களாக அன்புகாட்டி வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஒருசில சாதி அமைப்புகளும், அவர்களுக்கு பின்புலமாக இயங்கும் அரசியல் கட்சிகளும்தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளன.
எனவே தமிழக அரசு இதுபோன்றவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply