கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தில் பண்ணை வீடு கட்டி வாழும் பெண்
தமிழகம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளாக கொள்ளையடித்து கலக்கி வந்த பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தில் அவர் பண்ணை வீடு கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்வதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எல்லம்மா (வயது 45). வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆலமரத்து அருகே உள்ள மதுரா கிராமத்தை சேர்ந்தவர். இவர் மீது தமிழகம் முழுவதும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னையில் தேனாம்பேட்டை, மாம்பலம், அசோக்நகர், வடபழனி, வளசரவாக்கம், சாஸ்திரி நகர், குமரன் நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் இவர் மீது கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய கொள்ளைக்காரியாக வலம் வந்துள்ளார். ஆனால், போலீசாரை கைக்குள் போட்டுக்கொண்டு எளிதில் ஜாமீனில் வெளிவந்து விடுவார். இவர் தனது உண்மையான வீட்டு முகவரியை கொடுக்கமாட்டார். பொய்யான முகவரியை கொடுத்து தப்பித்து வந்தார்.
சமீபத்தில் வடபழனி முருகன் கோவிலில் வயதான பெண்களின் கவனத்தை திசைதிருப்பி, நகைகளை பறித்துச்சென்றுவிட்டார். இவர் நகைகளை பறிக்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கேமரா காட்சிகளை பார்த்து போலீசார் இவரை அடையாளம் கண்டனர். இவரை கைது செய்ய போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
கூடுதல் கமிஷனர் சங்கர், இணைக்கமிஷனர் அன்பு, துணைக்கமிஷனர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் இதற்காக தனி போலீஸ்படை அமைக்கப்பட்டது.
எல்லம்மா இதுவரை போலியான முகவரிகளை கொடுத்து தப்பித்து வந்தது தெரியவந்ததால், இவரது உண்மையான முகவரியை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, இவரது உண்மையான முகவரியை கண்டுபிடித்தனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மதுரா கிராமத்தில் பண்ணை வீடு கட்டி, அந்த வீட்டில் எல்லம்மா சொகுசாக வாழ்ந்து வருவது தெரியவந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் அதிகாலையில் பண்ணை வீட்டில் புகுந்து, எல்லம்மாவை சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னைக்கு அவர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-
கொள்ளைத் தொழிலில் எனக்கு ஆசானாக விளங்கியவர் எனது கணவர் ராஜேஷ் தான். அவர்தான் எனக்கு இந்த கொள்ளைத் தொழிலைக் கற்றுத்தந்தார். வயதான மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி அவர்களது கழுத்தில் அணிந்திருக்கும் தங்க சங்கிலிகளை பறிப்பது பற்றி நாங்கள் பயிற்சி எடுத்துள்ளோம். எனது கணவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி ரத்தினம்மா (வயது 50). நான் முறைப்பெண் என்பதால் எனக்கு கொள்ளைத்தொழிலை கற்றுக்கொடுத்து, எனது கணவர் இரண்டாவதாக என்னை மணந்து கொண்டார்.
மூன்றாவதாக மாதுரி என்ற பெண்ணையும் எனது கணவர் மணந்தார். நாங்கள் 3 பேரும் தமிழகம் முழுவதும் கோவில் திருவிழா நடக்கும் இடங்களுக்கு செல்வோம். திருவிழாக்களுக்கு வரும் பெண்களை ஏமாற்றி நகைகளை பறிப்போம். ஒரு இடத்திற்கு கொள்ளையடிக்கச் சென்றால் குறைந்தது 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு நாங்கள் வரவேண்டும். இல்லாவிட்டால் எங்களை கணவர் அடித்து உதைப்பார். மாதுரி தற்போது இறந்து விட்டார். ரத்தினம்மாவும், நானும்தான் கொள்ளைத் தொழிலை செய்துவந்தோம். எனது கணவருக்கு இருதய நோய் என்பதால் அவர் இப்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
எங்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அதன் மூலம் 7 பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள். எனது கணவர் தொழிலை விட்டு ஒதுங்கிவிட்டதால், மகன் சுரேஷை கொள்ளைத் தொழிலில் இறக்கியுள்ளோம்.
நாங்கள் கொள்ளைத்தொழிலை மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் செய்துவருகிறோம். போலீசார் எங்களை பிடித்தாலும் சாதாரண ஜேப்படி வழக்குகளை பதிவுசெய்து எளிதில் எங்களை ஜாமீனில் விட்டு விடுவார்கள். எங்களை ஜாமீனில் எடுக்க தமிழகத்தில் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆட்கள் உள்ளனர். உயர்-போலீஸ் அதிகாரிகளும் எங்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
நான் எனது 17-வயதில் கொள்ளைத் தொழிலை தொடங்கிவிட்டேன். தற்போதுதான் முதல்முறையாக எனது உண்மையான வீட்டு முகவரியை போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு எல்லம்மா போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
போலீசார் கையில் சிக்காமல் ரத்தினம்மாவும், சுரேசும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை கைது செய்யவும் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் 7 ஏக்கர் நிலம் வாங்கி அதில் பண்ணை வீடு கட்டியுள்ளனர்.
பழத்தோட்டம், பூந்தோட்டம், அமைக்கப்பட்டு எழில்மிகு தோற்றத்தோடு அந்த வீடு காட்சியளிக்கிறது. அந்த வீட்டின் ஆவணங்களை கைப்பற்றி, அதை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply