இலங்கை தமிழரை சொந்த விருப்பம் என்ற பெயரில் அனுப்புவதை நிறுத்த வேண்டும்:மருத்துவர் இராமதாஸ்
தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை ஒரு குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அணுகி அவர்களின் தற்போதைய நிலை குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கருத்து கேட்டு வருகின்றனர். அகதிகளை அவர்களின் சொந்த விருப்பம் என்ற பெயரில் இலங்கை அனுப்பும் வஞ்சக எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போரின் போது உயிர் பிழைக்கும் நோக்குடன் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த 2 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாம்களிலும், அவற்றுக்கு வெளியேயும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அணுகும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் 3 பக்கங்கள் கொண்ட வினாப் பட்டியலைக் கொடுத்து அவற்றுக்கான பதில்களை பெற்று பதிவு செய்து செல்கின்றனர். இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காகத் தான் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுவதாக கூறப் பட்டாலும் உண்மையான நோக்கம் அதுவல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த பட்டியலில் பல்வேறு வினாக்கள் இடம் பெற்றிருந்தாலும் அவற்றில் முதன்மையாக இடம் பெற்றிருக்கும் வினாக்கள் ஈழத் தமிழ் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பது பற்றியவை தான்.
உங்களுக்கான நிலையான தீர்வாக எதனைத் தேர்ந்தெடுப்பீர்கள்? என்று வினா எழுப்பப்பட்டு, அதற்கான விடை வாய்ப்புகளாக தன்னார்வத்துடன் இலங்கை செல்வது, இந்தியாவில் நிரந்தரமாக தங்குவது, வெளிநாடுகளுக்கு செல்வது ஆகியவை தரப்பட்டுள்ளன. ஒருவேளை அகதிகள் தாயகம் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தால், எப்போது செல்ல விருப்பம்? என்றும், அதற்காக ஏதேனும் உதவி தேவையா? என்றும் துணைக் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இது தான் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. ஒரு கருத்துக்கேட்பு நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுகிறது என்றால் ஒவ்வொரு விடை வாய்ப்புக்கும் துணை வினாக்கள் எழுப்பப்பட்டு, அதன் மீது அகதிகளிடம் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, அகதிகள் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்க விரும்புகிறார்களா? என்றொரு விடை வாய்ப்பு தரப்பட்டுள்ள நிலையில், அதை தேர்வு செய்யும் அகதிகளிடம் ‘‘நீங்கள் இந்தியாவிலேயே தங்க விரும்பினால், உங்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும்? என்னென்ன உரிமைகள் தேவை?’’ என கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த கணக்கெடுப்பைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளிடம் ஒரு வகையான பதற்றமும், நிச்சயமற்ற நிலையும் நிலவுவதிலிருந்தே இது உறுதியாகிறது.
இத்தகைய கருத்துக்கேட்புகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கைத் தமிழ் அகதிகள் அவர்கள் விரும்பும் வரை அனைத்து வசதிகள் மற்றும் உரிமைகளுடன் தமிழகத்தில் வாழ வகை செய்து தர வேண்டும். பணி செய்யும் உரிமை உள்ளிட்ட அகதிகளின் உரிமைகளை வரையறுக்கும் வகையில் சட்டம் இயற்றவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply