மழையால் தலைநகர் வெறிச்சோடிய நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கியூபா சென்றார், ஒபாமா

obama cubaகியூபாவுடனான 54 ஆண்டுகால அரசியல் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கியூபா தலைநகர் ஹவானா வந்தடைந்தார்.அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.

இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதேபோன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒபாமா கியூபா செல்வார் என்று பல மாதங்களாக கூறப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரண்டு நாட்கள் பயணமாக மார்ச் 20-ம் தேதி கியூபா தலைநகர் ஹவானா செல்வார் என வெள்ளை மாளிகை அறிவித்தது.

இந்நிலையில், தனது மனைவி மற்றும் இருமகள்களுடன் ஒபாமா இன்று கியூபா வந்தடைந்தார். தலைநகர் ஹவானாவில் அமெரிக்க அதிபரின் சிறப்பு விமான வந்திறங்கியபோது முன்னர் பெய்த பெருமழையால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. விமான நிலையத்தில் ஒபாமாவை கியூபா நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி புருமோ ரோட்ரிகுவெஸ் மற்றும் பிறத்துறைகளைச் சேர்ந்த மந்திரிகள், அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.

பின்னர், தனது பிரத்யேக காரில் ஏறிய ஒபாமா மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகர் ஹவானா நகர சாலை வழியாக சென்றபோது மழைக்கு இடையிலும் அவரைக்காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். ஒபாமாவின் வருகையையொட்டி நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க எதிர்ப்பாளர்கள் பலரை போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.

ஒபாமா செல்லும் பாதையில் உள்ள கட்டிடங்களில் உள்ள கடைகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கட்டிடங்களின் மொட்டைமாடிகளில் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த கால்வின் கூலிட்ஜ் என்பவர் கடந்த 1928-ம் ஆண்டு கடைசியாக கியூபாவுக்கு சென்றார். அவரது வருகைக்கு பின்னர் கடந்த 88 ஆண்டுகளுக்கு கழித்து ஒபாமா இங்கு வந்துள்ளதால் இந்தப் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஒபாமாவின் இந்தப் பயணத்தால் இருநாடுகளுக்கிடையில் நிலவிவரும் நெடுங்காலப்பகை முடிவுக்கு வரும். அதற்கேற்ப, கியூபா-அமெரிக்கா இடையிலான பல்தரப்பு உறவுகளை புதுப்பித்து, பலப்படுத்தும் வகையில் பல அதிரடி அறிவிப்புகளை இந்த சுற்றுப்பயணத்தின்போது ஒபாமா வெளியிடுவார் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply