தீவிரவாதிகள் தாக்குதலை மீறி மோடி பெல்ஜியத்துக்கு பயணம்

modiஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் பலியானார்கள். கடந்த நவம்பர் மாதம் பாரீஸ் நகரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி, 4 நாட்களுக்கு முன்பு பிரசல்ஸ் நகரில் பிடிபட்டான். அதைதொடர்ந்து, தீவிரவாதிகளின் நேற்றைய தாக்குதல் நடந்தது.

 

இதற்கிடையே, பிரசல்ஸ் நகரில், இந்தியா-ஐரோப்பிய கூட்டமைப்பு உச்சி மாநாடு, 30-ந் தேதி நடத்தப்பட உள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக அவர் அங்கு செல்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.

 

அதை போக்கும் வகையில், மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நிருபர்களை சந்தித்தார். ‘திட்டமிட்டபடி, பிரதமர் மோடி பிரசல்சுக்கு செல்வார், பயண திட்டத்தில் மாற்றம் இல்லை’ என்று அவர் கூறினார்.

 

அவர் மேலும் கூறுகையில், ‘பிரசல்ஸ் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் பெல்ஜியம் அரசுக்கும், மக்களுக்கும் ஆதரவாக இருப்போம். தீவிரவாதம் என்பது உலகளாவிய நோய். அதை எல்லோரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்’ என்றார்.

 

இந்திய-ஐரோப்பிய கூட்டமைப்பு உச்சி மாநாடு, 2012-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் நடக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பு, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி ஆகும். இருதரப்பும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அக்கூட்டமைப்பில் உள்ள பெல்ஜியம், இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளி ஆகும்.

 

எனவே, மோடியின் பயணம் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேலையும் மோடி சந்தித்துப் பேசுகிறார்.

 

பெல்ஜியத்தில் இருந்து பிரதமர் மோடி நேராக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு செல்கிறார். அங்கு 31-ந் தேதி மற்றும் ஏப்ரல் 1-ந் தேதிகளில், அணு பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் மோடி கலந்து கொள்கிறார்.

 

பின்னர், சவுதி அரேபியாவுக்கு மோடி செல்கிறார். இது, இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான பயணம் ஆகும்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply