வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களை வி.ஆனந்தசங்கரி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்க வைக்கப் பட்டிருப்பவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். வவுனியா நெலுக்குளம் முகாமுக்குச் சென்ற அவர், முகாமிலிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டார். எனினும், ஊடகவியலாளர்கள் எவரும் செய்தி சேகரிக்க முகாமுக்குள் அனுமதிக்கப்படவில்லையென பிராந்தியச் செய்தியாளர் அறியத்தருகிறார்.

அதேநேரம், முகாம்களின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து தொடர்ச்சியாக வழங்கப்பட்ட அழுத்தத்துக்கமைய நலன்புரி நிலையங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

எனினும், வவுனியாவிலுள்ள முகாம்களுக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பில் எந்தவிதமான மாற்றத்தையும் அவதானிக்க முடியவில்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட பின்னர் அவர்களின் சுதந்திரமான நடமாட்டம் உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுக் கூறினார்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களில் 61,000 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இடம்பெயர்ந்து வரும் மக்களை யூ.என்.எச்.சீ.ஆர். மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன ஓமந்தைச் சோதனைச்சாவடியில் சந்தித்துப் பேசமுடியும் என்றார்.

அத்துடன், நலன்புரி நிலையங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நோக்கில் நலன்புரி நிலையங்களின் முகாமைத்துவத்தை மீள்குடியேற்ற அமைச்சிடம் அரசாங்கம் கையளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சுற்றிவர முட்கம்பி வேலிகள்

இதுஇவ்விதமிருக்க அண்மையில் வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதநேய உதவித் திணைக்களத்தின் தலைவர் கென்ற்கின்ஸ்சி, முகாம்களில் பொதுமக்களைவிட இராணுவத்தினரையே அதிகமாகக் காண்டதாகக் கூறியிருந்தார்.

“சுற்றிவர முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு முகாம்களிலுள்ள மக்களைவிட அதிகமான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடையில் ஈடுபட்டிருப்பதையே முகாம்களில் காணக்கூடியதாகவிருந்தது. அங்கு பெருமளவான இராணுவத்தினர் உள்ளதுடன், பொதுமக்கள் முகாம்களுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு நடமாடும் சுதந்திரம் இல்லை” என அவர் கூறியிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply