பிரசல்ஸ் குண்டு வெடிப்பில் காயம் அடைந்த விமான சிப்பந்தி: மும்பை பெண்ணை கோமாவில் வைத்து சிகிச்சை
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகர விமான நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன பணியாளர்கள் அமித் மோத்வானி, நிதி சாபேகர் ஆகியோரும் அடங்குவர்.
இவர்களில், நிதி சாபேகரின் புகைப்படம், சம்பவம் நடந்த சற்று நேரத்தில் டெலிவிஷன்களில் வெளியானது. அவர் வெளிநாட்டவராக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், மும்பையைச் சேர்ந்தவர் என்று பிறகுதான் தெரிய வந்தது. 40 வயதான அவர், 2 குழந்தைகளின் தாய் ஆவார்.
குண்டு வெடிப்பில் அவரது உடலில் 15 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவரீதியாக அவரை ‘கோமா’ நிலைக்கு கொண்டு சென்று டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே, குண்டு வெடிப்பில் சிக்கியதால், நிதி சாபேகரின் மஞ்சள் நிற சீருடை கிழிந்திருக்க, முகத்தில் ரத்தம் வழிய, பார்வையில் மிரட்சி தெரிய அவர் அமர்ந்திருந்த கோலம், புகைப்படமாக உலகின் முன்னணி பத்திரிகைகள் அனைத்திலும் வெளியானது. பிரசல்ஸ் குண்டு வெடிப்புகளின் கொடூரத்தை உணர்த்தும் அந்த படம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, படகு கவிழ்ந்து அகதிகள் பலியான சம்பவத்தில், ஒரு குழந்தை, கடலோரத்தில் பிணமாக கிடந்த புகைப்படம், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு நிகராக, நிதி சாபேகரின் புகைப்படமும் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply