புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்காவிட்டாலும் பரவாயில்லை மக்களை வெளியேற அனுமதித்தால் போதும்: கெஹலிய ரம்புக்வெல
புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ள பொது மக்களை விடுவித்தால் போதும். ஏனைய விடயங்களை படையினர் கவனித்துக்கொள்வார்கள் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து தகவல் வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாக உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர சர்வதேச ரீதியில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து பாதுகாப்பு வலயத்திலிருந்து பொது மக்களை சுதத்திரமாக வெளியேற அனுமதிக்காத வரையில் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
புலிகள் ஆயுதங்களை கீழே வைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் பிடியில் சிக்கி அவதியுறும் பொது மக்களை வெளியேற அனுமதித்தாலே போதும். ஆயுதக்களைவையும் புலிகளைச் சரணடைய வைப்பதையும் படையினர் கவனித்துக்கொள்வார்கள்.
யுத்த நிறுத்தம் மற்றும் மோதல் தவிர்ப்பு ஆகிய இரு சொற்பிரயோகங்களும் இடையில் உள்ள வித்தியாசத்தை சில வெளிநாட்டு ஊடகங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
புலிகளின் பிரதேசத்திலிருந்து பொது மக்கள் வெளியேறுவது பற்றிய தகவல்கள் கிடைத்தால் படையினர் உடனடியாக அப்பிரதேசத்தில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவர். கடந்த மூன்று மாதங்களாக இந்த மோதல் தவிர்ப்பு தேவைக்கேற்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அண்மையில் ஜனதிபதியின் உத்தரவின் பேரில் 48 மணிநேர மேதல் தவிர்ப்பு இடம்பெற்றது. இராணுவ ரீதியில் 99 சத வீதம் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
எனவே எக்காரணம் கொண்டும் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply