குமார் குணரட்னத்திற்கு குடியுரிமை வழங்க முடியாது : சட்ட மா அதிபர்
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு இலங்கைக்கு குடியுரிமை வழங்கப்பட முடியாது என சட்ட மா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.குமார் குணரட்னம் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டுள்ளதனால் இலங்கைக் குடியுரிமையை கோருவதற்கு உரிமையில்லை எனவும், குடியுரிமை வழங்கக்கூடிய சாத்தியம் கிடையாது எனவும் சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி சொலிசுட்டர் ஜெனரல் பிரியந்த நவான நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
பிரேம் குமார் குணரட்னம் எனப்படும் நொயல் முதலிகே குடியுரிமை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
போலிப் பெயர்களைப் பயன்படுத்தி போலி கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு பயன்படுத்தியவருக்கு குடியுரிமை வழங்கப்பட முடியாது என பிரதி சொலிசுட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
குமார் குணரட்னம், சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோதமாக செயற்பட்டுள்ளார். மாஜிஸ்திரேட் நீதிமன்றில் குமார் குணரட்னம் தொடர்பில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த வழக்கு விசாரணை பூர்த்தியாகும் வரையில் குடியுரிமை வழங்குவது குறித்த மனு பரிசீலனைக்கு உட்படுத்தப்படக் கூடாது என சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதி சொலிசுட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரியுள்ளார்.
இதேவேளை, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மனுதாரர் அந்தக் காலச் சூழ்நிலைகளின் காரணமாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக குமார் குணரட்னத்தின் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
உயிர் அச்சுறுத்தல் காரணமாக போலிப் பெயர்களைப் பயன்படுத்த நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை கோரி சமர்ப்பித்த விண்ணப்பத்தை துறைசார் அமைச்சர் கண்டு கொள்ளாமை அநீதியானது என அவர் தெரிவித்துள்ளார்.
வாதப் பிரதிவாதங்களை அவதானித்த நீதவான், மனு குறித்த எழுத்து மூல விளக்கங்களை மே மாதம் 24ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு இரு தரப்பிற்கும் உத்தரவிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply