மோடிக்கு வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு: ஒபாமா விருந்து அளித்தார்
பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்காக கடந்த 29-ந் தேதி இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் (புதன்கிழமை) பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் போய்ச் சேர்ந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள மேல்பீக் சுரங்க ரெயில் நிலையம் சென்ற அவர் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து இந்திய – ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு நேற்று (வியாழக்கிழமை) அவர், 4-வது அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் போய்ச் சேர்ந்தார்.
வாஷிங்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விமான நிலையத்தின் வெளியேயும், மோடி தங்குகிற ஓட்டலுக்கு வெளியேயும் திரண்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள், மோடியை வரவேற்றனர். வாழ்த்து கோஷமிட்டனர். நேற்று இரவு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு விருந்து அளித்தார். அது 4-வது அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டின் தொடக்கமாக அமைந்தது. மாநாட்டில் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பேசுகிறார். அப்போது அணு ஆயுத தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக அவர் குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் இடையே ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் மோடி சந்தித்து பேசுவார் என தகவல்கள் கூறுகின்றன.
மாநாடு நிறைவு பெற்றதும், அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply