மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயற்படுங்கள் : ஓய்வுக்கு முன்னர் பொலிஸ் மா அதிபர் அறிவுரை
மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயற்படுங்கள். இதுவே எனது 36 வருட பொலிஸ் சேவை அனுபவத்தின் ஊடாக உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்பும் செய்தி என பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்தார். பொலிஸார் குறித்து தகவல்களை வெளிப்படுத்தும் ‘தேச’ என்ற வருடாந்த சஞ்சிகையின் வெளியீட்டு வைபவத்தில் கலந்துகொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த வைபவத்தில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்ததாவது,
எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நான் பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறேன். 1982 ஆம் ஆண்டு நான் எத்தகைய சந்தோஷத்துடன் பொலிஸ் சேவையில் இணைந்தேனோ அதே சந்தோஷத்துடனேயே ஓய்வு பெறுகிறேன். எனது பதவிக் காலத்தில் எனக்கு அனைத்து நிலை உத்தியோகத்தர்களும் ஒத்துழைப்பு வழங்கினர். அதனாலேயே என்னால் வெற்றிகரமாக செயற்பட முடிந்தது.
நான் பொலிஸ் மா அதிபர் பதவியை எதிர்பார்த்து சேவை செய்யவில்லை. அந்த பதவி என்னை தேடி வந்தது. அதனையே நான் உங்களுக்கும் கூறுகிறேன். பதவியை எதிர்பார்க்க வேண்டாம். மனசாட்சிக்கு அமைவாக சேவை செய்யுங்கள். பதவிகள் உங்களை நாடி வரும். பதவிகளைப் பெற்றுக்கொள்ள யாரின் பின்னாலும் சிபாரிசுகளை எதிர்பார்த்து செல்லாதீர்கள். அப்போது தான் உங்களால் சுயாதீனமாக கடமைகளை செய்ய முடியும். எனது 36 வருட பொலிஸ் சேவையில் இருந்து உங்களுக்கு சொல்ல நான் விரும்புவது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கடமைகளை செய்யுங்கள். அவ்வளவு தான். என்றார்.
இதன் போது உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரியவும், பொலிஸ் மா அதிபரும் பொலிஸார் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க வேலைத் திட்டங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply