தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கிறவர்கள் மீது அமெரிக்கா, சவுதி கூட்டு பொருளாதார தடை: பாக். அதிர்ச்சி

USA மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி நடந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் இருந்த லஷ்கர் இ தொய்பா, அமெரிக்காவில் தாக்குதல் நடத்தி உலகையே அதிர வைத்த அல்கொய்தா, ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல்கள் நடத்தி வரும் தலீபான் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக உலக நாடுகள் வரிந்து கட்டிக்கொண்டிருக்கின்றன.

இந்த தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளித்து, நிதி உதவி செய்து வருகிற தனி நபர்கள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக அரங்கில் கருத்து வலுத்து வருகிறது.

 

இந்த நிலையில் மேலே கூறிய தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிற 4 தனி நபர்கள் மற்றும் 2 நிறுவனங்கள் மீது அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் பொருளாதார தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன.

 

நவீத் உமர், அப்துல் அஜிஸ், நுரிஸ்தானி, முகமது இஜாஸ் சாப்ராஸ், ஜாகி உர் ரகுமான் லக்வி ஆகிய 4 நபர்தான் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட நபர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் பாகிஸ்தானை சேர்ந்த அல் ரஹ்மா நல அமைப்பு மற்றும் ஜாமியா அசரியா மதரசா ஆகும்.

 

இதுகுறித்த முறையான அறிவிப்பை அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்டுள்ளது.

 

தெற்கு ஆசிய நாடுகளில் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் கூட்டு நடவடிக்கை எடுத்திருப்பது இது இரண்டாவது முறை ஆகும்.

 

கடந்த ஏப்ரல் மாதம், பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் செயல்பட்டு வருகிற பர்கான் பவுண்டேசன் நல அறக்கட்டளை என்ற அமைப்பின் மீது இவ்விரு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன.

 

ஆனால் ஒரே நேரத்தில் 4 தனி நபர்கள், 2 நிறுவனங்கள் மீது இவ்விரு நாடுகளும் கூட்டு பொருளாதார தடை விதித்திருப்பது இதுவே முதல் முறை.

 

தன் நாட்டை சேர்ந்தவர்கள், அமைப்புகள் மீது அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் கூட்டு பொருளாதார தடை விதித்திருப்பது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியையும், தர்ம சங்கடத்தையும் அளித்துள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா செல்லும் சூழலில் தீவிரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்காக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் கூட்டாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக அமைந்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply