வடக்கு ஆளுநர் மீது விசாரணைசெய்ய வேண்டும்:விமல் வீரவன்ச

WIMALசாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி குறித்து கருத்து வெளியிட்டிருந்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மீது விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி விடுத்துள்ளது.ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இந்தக் கோரிக்கையை நேற்று சனிக்கிழமை விடுத்தார்.குற்றவியல் விசாரணைப் பிரிவினால் நேற்று சனிக்கிழமை விஜயம் செய்து வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய அவர் நேற்று பகல் குறித்த விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.இதன்போது குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு வருகைதந்திருந்த விமல் வீரசன்ச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வெடி பொருட்களையும், தற்கொலை அங்கியையும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காகவே வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கூறியிருக்கிறார். பாதுகாப்பு செயலாளர் இந்த வெடி பொருட்களை பழைய பொருட்கள் என்று கூறுகின்றார்.

இந்த பழைய பொருட்கள் பழைய கடைகளில் இருந்தா பெறப்பட்டன? பழைய பொருட்கள் என்று இவர்களால் கூறப்படுகின்ற வெடிபொருட்கள் இந்த நாட்டின் பலரது உயிரை காவுகொள்ளவிருந்தவையாகும்.

புதைக்கப்பட்டிருந்த போது எடுத்திருந்தால் சந்தேகம் எழுந்திருக்காது. மாறாக வீடொன்றிலிருந்தே இவை மீட்கப்பட்டிருக்கின்றன.

எனினும் இதனுடன் சம்பந்தப்பட்ட வலையமைப்பு குறித்து விசாரணை செய்யாமல் அரசியல் பழிவாங்கலில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்காக இந்த வெடிபொருட்கள் பதுக்கிவைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்த கருத்து தொடர்பாகவும் உரிய விசாரணை அவசியம். இந்த தகவல் எதிர்வுகூறல் அவரால் எவ்வாறு வெளியிட முடியும்? யாரால் இத்தகவல் அவருக்கு வழங்கப்பட்டது குறித்த விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும் – என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply