சவுதி அரேபியா மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு: 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Saudi பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி எண்ணெய் வளம் மிகுந்த நாடான சவுதி அரேபியாவில் 2 நாள் பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் நிறைவு நாளான நேற்று அவர் தலைநகர் ரியாத்தில் சவுதி அரேபிய தொழில் அதிபர்கள் மற்றும் இந்திய வர்த்தக தலைவர்கள் கூட்டத்தில் பேசினார்.

 

அப்போது மோடி கூறியதாவது:-

 

உலக நாடுகளின் பொருளாதாரம் சரிந்து வரும் நிலையிலும் இந்தியாவின் பொருளாதாரம் நம்பிக்கை தரும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. தொழில் நடத்துவதற்குரிய தனது ஆய்வு பட்டியலில் இந்தியாவின் தகுதியை 12 இடங்கள் உலக வங்கி உயர்த்தி இருக்கிறது. உலக வங்கியின் அடுத்த ஆய்வில் இந்த தகுதியிடம் இன்னும் மேம்படும் என்று நம்புகிறேன்.

 

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நிச்சயம் இந்த வரி நடைமுறைக்கு வரும். அதேபோல், முன்கூட்டியே வரிசெலுத்தும் முறை என்பதும் இனி கடந்த கால நிகழ்வாகத்தான் இருக்கும்.

 

சவுதி அரேபிய முதலீட்டாளர்களுக்கு பெட்ரோலியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கட்டமைப்பு, மருத்துவம், ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு ஆகிய துறைகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான உகந்த துறைகளாக உள்ளன. உரங்கள், உணவு பதப்படுத்துதல், சோலார் சாதனங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

 

இவ்வாறு அவர் பேசினார்.

 

ரியாத் நகரின் மையப்பகுதியில் முழுக்க முழுக்க பெண் ஐ.டி. ஊழியர்களைக் கொண்ட டி.சி.எஸ். பயிற்சி மையத்திற்கும் பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி, டி.சி.எஸ். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் என்.சந்திரசேகரன் ஆகியோர் வரவேற்றனர். இந்த பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆயிரம் ஊழியர்களில் 85 சதவீதம் பேர் சவுதி அரேபிய பெண்கள் ஆவர்.

 

இந்த மையத்தை 40 நிமிட நேரம் சுற்றிப் பார்த்த மோடி ‘‘உங்கள் அனைவரையும் திறமையை வெளிப்படுத்த இந்தியாவுக்கு அழைக்கிறோம். இங்கு பணிபுரியும் பெண்களிடம் நான் கண்ட திறமை இந்த உலகத்துக்கு புதிய செய்தியை தருவதாக உள்ளது’’ என்றார்.

 

இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னர், மோடி சவுதி அரேபியா சுகாதாரத்துறை மந்திரி அல்-பாலிக், வெளியுறவு மந்திரி அடெல் அல்-ஜூபைர் ஆகியோரையும் சந்தித்தார்.

 

இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், ‘உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரேபியாவின் ஆராம்கோ இந்தியாவின் பெட்ரோலியத் துறையில் பெரும் அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாக மந்திரி அல்-பாலிக், பிரதமர் மோடியிடம் உறுதி அளித்தார்’ என குறிப்பிட்டார்.

 

நேற்று மாலை பிரதமர் மோடி, சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத் அரசவையில் சந்தித்து பேசினார். அங்கு மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மன்னருக்கு, மோடி கேரளாவில் கி.பி.629-ம் ஆண்டில் அரேபிய வணிகர்களால் கட்டப்பட்ட செரமான் ஜூமா மசூதியின் தங்க முலாம் பூசிய மாதிரி வடிவத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

 

சவுதி அரேபியாவின் உயர்ந்த விருதை மோடிக்கு மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத் வழங்கினார்.

 

அப்போது இருநாடுகள் இடையே ராணுவ உறவை மேம்படுத்துவது, வர்த்தகம், முதலீடு, தீவிரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது பற்றி அவர்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு அதிக அளவில் வினியோகிக்கும் நாடாக திகழும் சவுதி அரேபியாவுடன் இத்துறையில் ஒத்துழைத்து செயல்படுவது, அதனை விரிவுபடுத்துவது பற்றி பிரதமர் மோடியும், மன்னர் சல்மான் பின்னும் விவாதித்தனர்.

 

அப்போது பிற நாடுகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதை உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது என்று இந்தியாவும், சவுதி அரேபியாவும் கூட்டாக அழைப்பு விடுத்தன. இதேபோல் தீவிரவாதத்தை எதிர்த்து போராட இரு நாடுகள் அளவிலும், ஐ.நா. சபையின் வாயிலாக பல்வேறு நாடுகள் தரப்பில் ஒத்துழைத்து செயல்படவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து இருநாடுகள் இடையேயும் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply