நாட்டின் பாரிய கடன் தொகைக்கு மஹிந்த அரசாங்கமே பொறுப்பு : எஸ்.எம். மரிக்கார்

marikarஇந்த நாட்டின் பாரிய கடன் தொகைக்கு மஹிந்த அரசே பொறுப்பு. அந்த அரசாங்கமே அதற்காக பதில் சொல்லியாகவேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கொலன்னாவைத் தொகுதி ஐ.தே.க அமைப்பாளருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, இந்த நாட்டின் பொருளாதாரத்தினை நாசமாக்கியது மஹிந்த அரசா அல்லது மைத்திரி ரணிலின் நல்லாட்சி அரசா என்பதை மக்கள் மனதால் அல்ல, தலையால் சிந்திக்க வேண்டும். கடன் தொகை அதிகரித்துள்ளதாக பொது எதிரணியினர் குற்றம் சுமத்துகின்றனர். இக்கடன் தொகைக்கு பொறுப்பு சொல்ல வேண்டியது இந்த அரசு அல்ல. மஹிந்த ஆட்சியே இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

 

இந்த நாட்டின் பொருளாதாரத்தினை எமக்குப் பொறுப்புத் தந்தபோது 19வீதமாக இருந்த நாட்டின் வரி வருமானம் 10.2 வீதமாக குறைவடைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு நாட்டின் மொத்த வருமானம் 1153 பில்லியன்களாகும். எனினும் 1162 பில்லியன் ரூபா கடன் வட்டி தவணைக் கொடுப்பனவுக்காக செலவிடப்பட்டுள்ளது. அதுபோன்று 2014 வருட இறுதியில் அரசாங்கத்தின் கடன் 7373 பில்லியன்களாகும். இதனடிப்படையில் தனியார் கடன் 357,233 ரூபாவாகும். உண்மையில் கடந்த அரசின் கடன் தொகை 8817 பில்லியன்களாகும். இறுதியில் இந்தச் சுமை எமது அரசின் தலையிலேயே விழுந்துள்ளது. என்றாலும் இந்தத் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு எமது அரசாங்க காலத்தில் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

 

நாட்டின் பொருளாதாரத்தினை உயர்த்த வேண்டுமாயின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். 2015 ஏற்றுமதி வருமானம் 9 மில்லியன் டொலர்களை 2020 ஆகும் போது 20 மில்லியன் டொலர்களாக அதிகரிக்க வேண்டும். இந்த இலக்கினை அடைய 4 ஆண்டு காலத்துக்குள் எமது ஏற்றுமதியை இரு மடங்காக அதிகரிக்க வேண்டியுள்ளது. கடந்த அரசு காலத்தில் இல்லாமல் போன ஏற்றுமதி வரிச் சலுகையை( ஜீ.எஸ்.பி) இந்த ஆண்டில் நிச்சியமாக பெற்றுக்கொள்ள முடியும். விஷேடமாக தற்போது இந்த நாட்டில் நல்லாட்சி மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலாக்களின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நற்புறவு காரணமாக இதனை மீண்டும் பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply