65,000 வீட்டுத் திட்டம்: நிராகரித்தால் இரணைமடுத் திட்டம் போலாகிவிடும் : டக்ளஸ் தேவானந்தா
உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் 65,000 வீட்டுத் திட்டத்தை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது கடந்த காலத்தில் நாம் ஆட்சியில் இருந்தபோது இந்திய அரசுடன் பேச்சுநடத்தி இந்திய வீடமைப்புத்திட்டத்தை மேற்கொண்டோம். அந்த வகையில் தற்போது
நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் இந்த 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை இன்னும் தரமானதாக எமது மக்களின் வாழ்க்கை முறைமைக்கு ஏற்றவாறு முன்னெடுத்திருக்க முடியும். இதனை இந்த அரசுடன் இணக்க அரசியல் நடத்துபவர்கள் செய்திருக்க வேண்டும்.ஆனாலும் அவர்களுக்கு எமது மக்கள் குறித்து எதுவித அக்கறையும் இல்லை என்பதையே அவர்களது செயற்பாடுகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன.
தற்போது அமைக்கப்படவுள்ள இத் திட்டத்தின் வீடுகளை ஓர் இடைக்கால ஏற்பாடாக உடனடி தேவைகளுக்கு உட்பட்டிருக்கும் எமது மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வீடுகளைப் பெறாமல் இத் திட்டம் நிராகரிக்கப்படுமானால் இதற்கு மாற்றீடாக ஒரு திட்டம் எமக்குக் கிடைக்கப் போவதில்லை. அத்துடன் இப்போதைக்கு நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வேறொரு வீட்டுத் திட்டமும் உடனடியாக சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
இறுதியில் இரணைமடு நீர் வழங்கல் திட்டத்திற்கு ஏற்பட்ட நிலைமைதான் இதற்கும் ஏற்படும். அன்று இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை எதிர்த்து அதனை முன்னெடுக்க விடாமல் தடுத்த தமிழ்த் தலைமைகளால் இன்றுவரை எமது மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்க நடைமுறை சாத்தியமான ஒருதிட்டத்தைக் கொண்டுவர முடியாதுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply