ஏவப்பட்ட ராக்கெட்டை கடலில் பத்திரமாக தரையிறக்கும் முயற்சியில் அமெரிக்க நிறுவனம் சாதனை
சாதாரணமாக, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஏவப்படும் ராக்கெட்களில் நான்கைந்து உந்து இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரம்வரை விண்ணில் பறந்த பின்னர், அதுவரை அந்த ராக்கெட்டை இயக்கிய முதல் உந்து இயந்திரம் ராக்கெட்டில் இருந்து விடைபெற்று, தனியாக கழன்று, தீப்பிழம்பாக மாறி, அருகாமையில் உள்ள கடல் அல்லது மலைப்பிரதேசத்தில் சாம்பலாக விழுந்துவிடும்.
அதையடுத்து, இரண்டாவது உந்து இயந்திரமும், மூன்றாவது உந்து இயந்திரமும், செயற்கைக்கோள்களை சுமந்து சென்று புவியின் நீள்வட்டப் பாதைக்கு மேலே குறிப்பிட்ட தூரம்வரை பயணித்து, அந்த செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தும். பின்னர், அந்த செயற்கைக்கோள்கள் தங்களது பணிகளை செய்யத் தொடங்கும்.
இந்த வாடிக்கையான நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வாளர்கள், ஒருமுறை பூமியில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற ராக்கெட் பத்திரமாக மீண்டும் செலுத்திய இடத்துக்கே திரும்பிவந்து தரையிறங்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க முயன்று வந்தனர்.
இப்படி திரும்பிவரும் ராக்கெட்களை செப்பனிட்டு, சீர்படுத்தி, மீண்டும் அடுத்தமுறை அவற்றை வைத்து வேறு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு ஏவினால், அவ்வப்போது புதிய ராக்கெட்களை தயாரிக்கும் நேரமும், பணமும் மிச்சமாகும் என்ற நோக்கத்தில் இதற்கான ஆராய்ச்சிகளை ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் தனியார் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வந்தன.
அவ்வகையில், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அமேசான் டாட்காம் நிறுவனத்தின் துணை நிறுவனமான புளூ ஆர்ஜின் என்ற நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் நடத்திய சோதனை வெற்றியில் முடிந்தது. சோதனை முயற்சியில் ஏவிய இடத்துக்கே ராக்கெட் திரும்பி வந்தது. ஆனால், அந்த ராக்கெட்டில் செயற்கைக்கோள்கள் எதுவும் பொருத்தப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படவில்லை.
இதையடுத்து, ராக்கெட்களை விண்ணில் ஏவும் தொழிலில் ஜாம்பவனாக விளங்கும் ஸ்பேஸ் எக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம், வர்த்தகரீதியாக 11 செயற்கைகோள்களை சுமந்து சென்ற ராக்கெட்டின் முதலாம்நிலை பகுதியை மீண்டும் பத்திரமாக தரையிறக்கி கடந்த டிசம்பர் மாதம் புதிய சாதனை படைத்தது.
பூமியில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற அந்த ராக்கெட்டின் 156 அடி நீளம்கொண்ட முதல்நிலை உந்து இயந்திரம் (first stage rocket) ராக்கெட்டில் இருந்து கழன்று, பிரிந்து, பத்தே நிமிடங்களில் பூமியை நோக்கி பத்திரமாக திரும்பி வந்தது. இதைக்கண்ட ஆர்ப்காம் நிறுவன பொறியாளர்களும், பணியாளர்களும் உற்சாகமிகுதியால் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து துள்ளிகுதித்தனர்.
ஆரஞ்சுநிற தீப்பந்தாக ஒளியை உமிழ்ந்தபடி பூமியை நோக்கி திரும்பிய “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” தரையிறங்கும் தானியங்கி கால்களை விரித்தபடி, ஏவப்பட்ட இடத்தில் இருந்து தெற்கே சுமார் ஆறு மைல் தூரத்தில் பத்திரமாக வந்து அமர்ந்தது. இந்த நிகழ்ச்சியை மேற்கத்திய ஊடகங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லாக குறிப்பிட்டன.
அதேவகையிலான “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” ராக்கெட் மூலம் பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதி அமெரிக்கா விண்ணில் செலுத்தியது. கலிபோர்னியா அருகேயுள்ள வான்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட அந்த ராக்கெட் செயற்கைக்கோளை சுமந்தபடி திட்டமிட்ட இலக்கை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாக நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
‘ஜேசன் 3’ செயற்கைகோளை சுமந்து செல்லும் “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” ராக்கெட்டை பத்திரமாக கடலில் தரையிறக்க விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, கலிபோர்னியா கடல் பகுதியில் தயாராக நிற்க வைக்கப்பட்டிருந்த கப்பலில் அந்த ராக்கெட் திரும்பிவந்து தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு கடலுக்கு திரும்பிய அந்த ராக்கெட், கப்பலின் மீது செங்குத்தாக இறங்கியது. ஆனால், சென்ற முறையைப்போல் இல்லாமல் எதிர்பாராதவிதமாக அந்த ராக்கெட் ஒருபுறமாக சாய்ந்து, கீழே விழுந்து நொறுங்கி தீக்கிரையானது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்தகட்ட முயற்சியாக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு அமெரிக்காவின் நாசா அனுப்பிய பொருட்களை சுமந்தபடி, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கடல்பகுதியில் இருந்து (உள்ளூர் நேரப்படி) நேற்று மாலை 4.43 மணியளவில் மேலும் ஒரு “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இருநிலை (two-stage) என்ஜின்களுடன் விண்ணில் உயரக் கிளம்பிய அந்த ராக்கெட்டின் 23 அடி உயரம் கொண்ட முக்கியப் பகுதி, புறப்பட்ட சுமார் இரண்டரை நிமிடத்தில் இரண்டாக பிரிந்தது.
அட்லான்டிக் பெருங்கடலில் மிதந்த ஒரு கப்பலில் அமைக்கப்பட்டிருந்த தளத்தில் நான்கு செய்றகைக் கால்களை பரப்பியவாறு, கப்பலுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாமல் எட்டாவது நிமிடத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இந்த வெற்றியை கொண்டாடிவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இனி வாரமிருமுறை இதுபோன்ற “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. விண்வெளித்துறை ஆய்வு வரலாற்றில் மகத்தான இந்த வெற்றிக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அவர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைப்போல் புதுமையான முயற்சிகளை மேற்கொள்பவர்களால்தான் விண்வெளித்துறை ஆய்வில் அமெரிக்க தனிச்சிறப்புடன் திகழ்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9” ராக்கெட் மூலம் விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்துக்கு உணவுப் பொருட்கள், ஆராய்ச்சி உபகரணங்கள், தங்கும் பெட்டி என 3,175 கிலோ எடையுள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை வரும் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply