முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தால் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாது : சம்பந்தன்

sampanthanமுஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதி, சந்தோஷமாக வாழ முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உளப்பூர்வமாகச் செயற்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நம்புகிறது. அதேபோன்று சர்வதேசமும் இவர்கள் மீது ஆதரவு , நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

மட்டக்களப்பு சித்தாண்டியில் புனரமைக்கப்பட்ட ஏறாவூர்- வட மேற்கு கூட்டுறவுச்சங்கத்தின் கால் நடைத்தீவன உற்பத்தித் தொழிற்சாலை திறப்புவிழா நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

கிழக்கு மாகாண விவசாய கூட்டுறவுத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், ச.வியாழேந்திரன் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

அவர் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்: – தமிழ்மக்களும் முஸ்லிம்களும் கடந்த காலங்களில் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர். அதேபோன்று எமது மாவட்டத்தில் வாழும் பெரும்பான்மை மக்களும் சுதந்திரமாக சகல உரிமைகளுடன் வாழ வேண்டும்.

 

நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் சமத்துவமாக வாழ்வதையே விரும்புகிறோம். நீதியின் அடிப்படையில் ஆட்சி நடைபெற வேண்டும். நாங்களும் கெளரவமாக சுய மரியாதையுடன் வாழ வேண்டும். இதனை உறுதி செய்து முழுமையான அடைவைப் பெறவேண்டும் என்றால் தமிழ் மக்களும் முஸ்லிம்களும் தமக்கிடையில் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமைப்படுவதுடன் தம்முடைய பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

 

தமிழ்- ,முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த காலத்தில் தலைவர் அஷ்ரபுடன் பேசி இணைக்கப்பாட்டிற்கு வந்திருந்தோம்.

 

இந்த விவகாரம் சந்திரிகா அம்மையாரின் காலத்தில் தயாரிக்கப்பட்ட அரசியல் சீர்திருத்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

 

ஆகையால் சகோதர இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை சமத்துவம், சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு தீர்த்துக்கொள்வதே சிறந்தது.

 

முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதி,சந்தோசமாக வாழ முடியாது.

 

இந்த நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அனைவரும் சமத்துவமாக வாழ வேண்டும் என்ற கோட்பாட்டுடன் ஒன்றுபட்டு பெறக்கூடியவற்றை முழுமையாக பெற்றுக்கொள்ள திடகங்கற்பம் பூணவேண்டும்.

 

இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் உளப்பூர்வமாகச் செயற்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நம்புகிறது அதேபோன்று சர்வதேசமும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நம்பிக்கை வைத்துள்ளது” என்றார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply