உள்ளக விசாரணைப் பொறிமுறை இறுதி வடிவம் விரைவில்:அமைச்சர் மங்கள சமரவீர
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ள நிலையில்அதற்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் தனது உள்ளக விசாரணை பொறிமுறையை முன்வைக்கவுள்ளது.அதனை நோக்காகக் கொண்டு உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவத்தை இறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட செயலணியானது மக்களிடம் கருத்துக்களையும் யோசனைகளையும் கோரியுள்ளது. அத்துடன் புதுவருடப் பண்டிகையின் பின்னர் மக்களுடன் நேரடி கலந்துரையாடல்களையும் இந்த விசேட செயலணி நடத்தவுள்ளது.
அந்தவகையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், தொடர்பாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையின் இறுதி வடிவமானது மே மாத இறுதியில் தயாராகுமென தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அந்தத் திட்டம் ஜெனிவாவுக்கு கையளிக்கப்படும்.எதிர்வரும் ஜூன் மாதம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ள பேரவையின் 32வது கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை நிலைமை தொடர்பில் வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார்.
இந்நிலையிலேயே அதற்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணைப் பொறிமுறை குறித்த இறுதி வடிவத்தை தயாரிப்பதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகிறது.
ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்ளவுள்ள உயர்மட்ட தூதுக்குழு உள்ளக விசாரணை பொறிமுறை குறித்து சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தவுள்ளது.
அத்துடன் உள்ளக விசாரணை பொறிமுறை வடிவமும் ஜெனிவாவுக்கு கையளிக்கப்படவுள்ளது.இந்தக் கூட்டத் தொடர்பில் அமைச்சர்கள் மட்ட தூதுக்குழு கலந்து கொள்ளும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்கம் ஏற்கனவே உள்ளக விசாரணைப் பொறிமுறை தொடர்பில் அடிப்படைத் திட்டமொன்றை தயாரித்துள்ளது. அந்த அடிப்படைத் திட்டத்தில் காணாமல் போனோர் குறித்த அலுவலகம் நட்டஈடு வழங்கும் செயற்பாடு, நீதித்துறை, மற்றும் மீண்டும் ஒரு யுத்தம் நிகழாத வகையில் அரசியல் தீர்வு ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனவே அந்த அடிப்படைத் திட்டத்தை முதன்மையாகக் கொண்டே இறுதி வடிவம் தயாரிக்கப்படவுள்ளது.இது இவ்வாறிருக்க கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயிட் அல் ஹுசைன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அத்துடன் செய்ட்அல் ஹுசேன் கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதில் இலங்கை பொறுப்புக்கூறல் நல்லிணக்கம், மற்றும் சமாதானத்தை அடைவதில் முன்னெடுக்கும் அதன் சொந்த செயற்பாடுகளில் முக்கிய பாடங்கள் காணப்படுகின்றன.
தற்போது அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தார்.காணாமல் போனோரின் பிரச்சினகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் அடுத்த சில மாதங்கள் மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்றது என்றும் செயிட் அல் ஹுசைன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply