ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றுவோம்: மு.க.ஸ்டாலின்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியானதும் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.அங்கு பெரவள்ளூர் சதுக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் பி.கே.சேகர்பாபு (துறை முகம்), ப.ரெங்கநாதன் (வில்லிவாக்கம்), தாயகம் கவி (திரு.வி.க.நகர்), கே.எஸ்.ரவிச்சந்திரன் (எழும்பூர்), ஆகிய 4 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மு.க. ஸ்டாலின் பேசியதாவது:–
தி.மு.க. சார்பில் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக இங்கு வந்திருக்கிறேன். இந்த தொகுதியில் என்னை 2011–ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தரவில்லை என்று சொன்னாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள்.
உங்களைப் பொறுத்த வரையில் அப்போது நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளித்தீர்கள்,
ஆனால் முறையாக வாக்கு எண்ணிக்கை நடந்திருந்தால் நிச்சயமாக 20000–25000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்பதுதான் உண்மை. சத்தியம்.
இந்த நிலையில் மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக, கழகம் அமைத்திருக்கும் கூட்டணியின் சார்பில் நான் வேட்பாளராக உங்கள் முன் நிறுத்தப்பட்டு இருக்கிறேன்.
இப்போது முதல்– அமைச்சராக இருக்கக் கூடிய ஜெயலலிதா, 2011 தேர்தலில் பல வாக்குறுதிகள் தந்தார்.
இப்போதும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் தர இருக்கிறார். அப்போது அவர் தந்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? என்றால் இல்லை.
ஆனால் 6–வது முறையாக தமிழகத்தை ஆளக்கூடிய, முதல்வராக பொறுப்பேற்க உள்ள தலைவர் கலைஞர் 2006–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தந்த உறுதி மொழிகளை, வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி, சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் சேர்த்து நிறைவேற்றி தந்தார். இது உங்களுக்கே நன்றாக தெரியும். அதனால்தான் கடந்த 10–ம் தேதி தலைவர் கலைஞர், தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நேரத்தில் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
உறுதி மொழியாக அவர், “சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்”, என்று குறிப்பிட்டுக் காட்டி யிருக்கிறார்.
எனவே தி.மு.க. தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றுவோம். பூரண மதுவிலக்கு அமுல் படுத்துவதுதான் முதல் பணி. இதை தொடர்ந்து அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போ தெல்லாம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களைத் தேடி வருவார்கள், உங்களை நாடி வருவார்கள் என்று நான் உறுதியுடன் குறிப்பிட விரும்புகிறேன். இனியும் அரசியல்வாதிகளை தேடி நீங்கள் போகக் கூடாது, உங்களை தேடி அவர்கள் வர வேண்டும், வருவார்கள்.
எனவே நம்பிக்கையோடு கொளத்தூர் தொகுதியின் வேட்பாளரான, உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கும் கழக வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தந்து வெற்றியைப் பெற்றுத் தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply