பிரேசில் அதிபரை பதவி நீக்கம் செய்யும் பாராளுமன்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

brasilபிரேசில் அரசுக்கு சொந்தமான எண்ணை நிறுவனமான ‘பெட்ரோபாஸ்’ நிறுவனத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் 80 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான ஊழல் தொடர்பாக அந்நாட்டின் அதிபர் டில்மா ரூசெப் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.இந்நிலையில், தனது அரசு உதவியாளர் என்ற அந்தஸ்துடன் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா என்பவரை புதிய மந்திரியாக டில்மா ரூசெப் கடந்த புதன்கிழமை நியமித்தார். வரும் 2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தனக்கு பதிலாக லுலாவை களமிறக்க டில்மா ரூசெப் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தனது நெருங்கிய கூட்டாளியான லூலாவை இந்த பதவியில் நியமித்து, தன்மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை டில்மா ரூசெப் மறைக்க முயல்வதாக பிரேசில் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ள நிலையில், இந்த நியமனத்தை எதிர்த்து நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

டில்மா ரூசெப் மீது கூறப்படும் பலகோடி மதிப்பிலான ஊழல் புகாரில் லுலாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதால், அவரது பதவி நியமனம் செல்லாது என பிரேசில் நாட்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கில்மார் மென்டெஸ் அறிவித்தார். ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் வகையில் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு அவர் பரிந்துரைத்தார்.

இதற்கிடையே, பாராளுமன்றத்தில் டில்மா ரூசெப் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சியில் எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தில் டில்மா ரூசெப்-புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் தனக்கு போதிய ஆதரவு கிடைக்காது என்பதை அறிந்துள்ள டில்மா ரூசெப், பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு தடை விதிக்குமாறு அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இதுதொடர்பாக, அவரது வக்கீல் தாக்கல் செய்த அவசர மனுவின்மீது விசாரணை நடத்திய நிதிபதிகள், பிரேசில் அதிபரை பதவி நீக்கம் செய்யும் பாராளுமன்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடைபெறுவதும், டில்மா ரூசெப் பதவி விலகுவதும் உறுதியாகி விட்டதாக அந்நாட்டின் பிரபல ஊடகங்கள் கூறுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply