ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது:மத்திய அரசு

NALINIமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991–ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் செய்தபோது விடுதலைப்புலிகள் மனித வெடிகுண்டு தாக்குதலால் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனையும், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.பின்னர் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோருடைய மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களை மாநில அரசே தன்னிச்சையாக முடிவு செய்து விடுவிக்கலாம் என சட்ட விதிகள் உள்ளன.

ஆனால், இவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் உள்ளனர். எனவே, அவர்களை விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து 2014–ம் ஆண்டு தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய முடிவு எடுத்தது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்து கேட்பதற்காக கடிதம் எழுதப்பட்டது. ஆனால், மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

சுப்ரீம் கோர்ட்டு 5 பேர் கொண்ட பெஞ்ச்சை அமைத்து விசாரித்தது. அந்த பெஞ்ச் அளித்த தீர்ப்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய சட்டப்படி சி.பி.ஐ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் மாநில அரசுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறியது. இதனால் அப்போது 7 பேரையும் விடுதலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 2–ந்தேதி தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகன் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அவர் கூறியிருந்ததாவது:–

ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்ற 7 பேரும் தமிழக அரசுக்கு மனு அனுப்பி உள்ளனர். அதில், நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருப்பதால் எங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். ஆயுள் தண்டனை பெற்ற அவர்கள் 24 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு கருதுகிறது. இது சம்பந்தமாக தங்களது முடிவை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த கடிதம் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை பதில் அனுப்பி உள்ளது. அதில், இந்த விஷயம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையின் கீழ் இருப்பதால் யாராலும் இதன் மீது இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழக அரசின் கடிதம் வந்ததை அடுத்து மத்திய சட்டத்துறையிடம் நாங்கள் இது சம்பந்தமாக கருத்து கேட்டோம்.

அதற்கு சுப்ரீம் கோர்ட்டில் இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருப்பதால் எந்த முடிவும் இப்போது எடுக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply