தேசத்துரோக வழக்கில் முஷரப்புக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (வயது 72). இவர் மீது முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, ஆட்சிக்காலத்தில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கு, தேசத்துரோக வழக்கு என பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அவர் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அதன்படி வெளியேறும் கட்டுப்பாடு பட்டியலில் இருந்து முஷரப்பின் பெயரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நீக்கியது. உடனே அவர் துபாய்க்கு புறப்பட்டு சென்றார். முதுகுத்தண்டு பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் துபாய் செல்வதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் அவர் மீதான தேசத்துரோக வழக்கு நீதிபதி மசார் ஆலம்கான் மியான்கெல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முஷரப், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு அவரது வக்கீல் மனு தாக்கல் செய்தார்.ஆனால் அந்த மனுவை நீதிபதி மசார் விசாரித்து தள்ளுபடி செய்தார். இதையடுத்து முஷரப்பை கைது செய்து ஆஜர்படுத்துவதற்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து அவர் உத்தரவிட்டார்.
அத்துடன் முஷரப் ஜாமீனுக்காக பிணைப்பத்திரம் வழங்கிய முன்னாள் மேஜர் ஜெனரல் ரஷீத் குரேஷி, ஜாமீன் தொகை ரூ.25 லட்சத்தை 15 நாளில் செலுத்துமாறும் நீதிபதி மசார் உத்தரவு பிறப்பித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply