பிரேசிலில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் தில்மா ரூசெப், நியூயார்க் பயணம்

brasilபிரேசில் நாட்டில் தில்மா ரூசெப் (வயது 68), 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பதவி வகித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, வெற்றி பெறுவதற்காக நாட்டின் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கிறது என்று காட்டிக்கொள்வதற்காக, நாட்டின் வருமானத்தை உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இதன் அடிப்படையில் அவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு பாராளுமன்றத்தில் குற்ற தீர்மானம் கொண்டு வர பாராளுமன்றத்தின் சிறப்பு குழு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் கீழ்சபையில் குற்ற தீர்மானம் கொண்டு வர தயாரானபோது, சுப்ரீம் கோர்ட்டில் தில்மா ரூசெப் வழக்கு தொடுத்தார். ஆனால் அங்கே அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தது.

 

அதைத்தொடர்ந்து பாராளுமன்ற கீழ்சபையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான குற்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் அங்கு 17-ந் தேதி வெற்றி பெற்றதை தொடர்ந்து மேல்-சபையான செனட் சபைக்கு செல்கிறது.

 

இந்த நிலையில், ஐ.நா. சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக தில்மா அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் அமெரிக்க பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல் வெளியானது.

 

இப்போது அவர் நியூயார்க் செல்வது உறுதியாகி உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) நியூயார்க்கில் ஐ.நா. சபை கூட்டத்தில் தில்மா கலந்துகொள்வதாக அவரது உதவியாளர் நேற்று அறிவித்தார். அங்கு அவர் தன் மீதான பதவி பறிப்பு குற்ற தீர்மானத்துக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

ஏற்கனவே இந்த தீர்மானத்தை அவர் ஆயுதமின்றி நடக்கிற ஆட்சி கவிழ்ப்பு முயற்சி என குறிப்பிட்டார்.

 

இதற்கிடையே அந்த நாட்டின் எரிசக்தி துறை மந்திரி எட்வர்டோ பிராகா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது மையவாத பி.எம்.டி.பி. கட்சியின் உத்தரவுக்கு பணிந்து பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

 

தில்மா ரூசெப்பின் பிரதான கூட்டணி கட்சியே அவர் பதவியை பறிக்க ஆதரவு தெரிவித்து, அவரை கை விட்டு விட்டது.

 

31 மந்திரிகளை கொண்டிருந்த தில்மா மந்திரிசபையில் இதுவரை 9 மந்திரிகள் பதவி விலகி உள்ளனர். முக்கிய துறைகளில் மந்திரிகள் இல்லை. அங்குள்ள ரியோடிஜெனீரோ நகரில் ஆகஸ்டு மாதம் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ள நிலையில், விளையாட்டு துறைக்கே மந்திரி இல்லை. இதனால் அங்கு அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. மந்திரிசபை ஊசலாட்டத்தில் உள்ளது.

 

ஒலிம்பிக் போட்டி தொடங்கும்போது, தில்மா அதிபர் பதவியில் இருப்பாரா என்பதுவும் கேள்விக்குறியாகி உள்ளது.

 

செனட் சபையில் தில்மா மீதான பதவி பறிப்பு குற்ற தீர்மானம் மூன்றில் இரு பங்கு ஓட்டுகளுடன் நிறைவேறி விட்டால், அவர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விடும். துணை அதிபர் மிக்கேல் டெமர், இடைக்கால அதிபர் பொறுப்பை ஏற்பார்.

 

இதற்கு அவர் தயாராகி வருகிறார். சாவ் பவுலோ நகரில் அவர் தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் புதிய மந்திரிசபை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தலைமையில் புதிய மந்திரிசபை பதவி ஏற்றால், பிரேசிலின் வலிமை வாய்ந்த வங்கி தொழில் துறை அமைப்பின் தலைவர் முரிலோ போர்சுகல் நிதி மந்திரி ஆவார் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply